எய்ட்ஸ் நோயும், பாதுகாக்கும் முறைகளும்

பல்வேறு நோய்களால் தாக்கப்பட்ட ஒருவருக்கு, அவருடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கியிருப்பதை மருத்துவ பரிசோதனை உறுதி செய்யும் பரிதாபகரமான நிலைதான் எய்ட்ஸ்.

இது மனிதர்களின் இயற்கையான நோய் எதிர்ப்புத் தன்மையில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மனித உயிருக்கு எமனாக வரும் இந்த அபாயகரமான நோய் முதன் முதலில் 1981-ம் ஆண்டில் (டிசம்பர்) கண்டறியப்பட்டது.
1983-ல் பாரிஸ் நாட்டை சேர்ந்த லுக் மாண்டேக்னியர் என்ற ஆய்வாளரும் மற்றும் அமெரிக்காவில் உள்ள ராபர்ட் கேலோ என்ற ஆய்வாளரும் எய்ட்ஸ் நோய்க்குரிய வைரசினை தனித்தனியாகக் கண்டறிந்தனர். 1986-ல் இந்த வைரசுக்கு மனிதன் முயன்று பெற்ற நோய் என்றும் எதிர்ப்பாற்றல் தேய்வு என்றும் பெயரிட்டனர்.
எச்.ஐ.வி தொற்று கிருமிகள் உள்ளவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் உறவு கொண்டால் அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தொற்றி விடுகிறது. 80 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் வர இதுவே காரணமாகும்.
25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் எய்ட்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் அந்த வயதில் பாலுறவில் அதிக நாட்டமிக்கவராக இருப்பதால், பாதுகாப்பான உடல் உறவை மறந்து விடுகின்றனர். எச்.ஐ.வி கிருமி உள்ள பெண்களுடன் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்வதன் மூலமும்.எச்.ஐ.வி பரிசோதனை செய்யாத ரத்தத்தை செலுத்துவதன் மூலமும் எச்.ஐ.வி தொற்று உள்ளவர்கள் பயன்படுத்திய சுத்திகரிக்கப்படாத ஊசி, கத்தி, பிளேடு மற்றும் பிற ரத்தத்தோடு தொடர்பு உள்ள உபகரணங்களை பயன்படுத்துதல் மூலமும் இந்த நோய் ஏற்படுகிறது.
எச்.ஐ.வி தொற்று கொண்ட கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கும் இந்நோய் வரலாம். ஒரு நாடு, சமூகம், குடும்பம், தனிமனிதன் என எல்லா நிலைகளிலும் தற்காப்பு என்பது ஒரு அத்தியாவசியமான தேவையாகும். அந்த தற்காப்பிற்கு பாதுகாப்புப்படை என்பது நாட்டிற்கு எவ்வளவு அவசியமோ அதே போல உயிரினங்களுக்கும் நோயை எதிர்க்கும் ஆற்றல் தரும் அணுக்களின் படை மிக மிக அவசியமாகிறது. நல்வாழ்வுக்கும், நோயுறு நிலைக்கும் இடையறாத போராட்டமே உயிர் வாழ்க்கை. எய்ட்ஸ் கிருமியின் அணுகுமுறை சாதாரண நோய்க் கிருமிகளிலிருந்து மாறுபடுகிறது,
அந்த வைரஸ் நேரடியாக தற்காப்பு வெள்ளை அணுக்களின் எண்ணிக்கைப் பெருக்கத்தை தடுத்து நோய் எதிர்ப்பு ஆற்றலை முற்றிலுமாகச் சீர்குலைப்பதுதான் அதன் தீவிரப் பண்பாகும். இது எப்படிஎன்றால் நமது நாட்டை காக்கும் காவலர்களை முற்றிலுமாக அழித்து விட்டால் நிலைமை என்ன ஆகும். மக்கள் பாதுகாப்பை இழந்து விட்ட நிலையில் யார் வேண்டுமானாலும் என்ன தீங்கு வேண்டுமானாலும் செய்து நம்மை அழித்து விடமுடியும். எய்ட்ஸ் கிருமிகள் நமது நோய் எதிர்ப்புச் சக்தியை முற்றிலும் அழித்து விட்ட நிலையில் ஒரு சாதாரணக் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் கூட நமது உயிரை பலிவாங்கி விடும்.
துரதிர்ஷ்டவசமாக இந்த எய்ட்ஸ் நோயானது மனிதர்களின் சுரப்பு நீர்களின் மூலமும், ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை இன்னொருவருக்குப் பயன்படுத்துவது மூலமும் பரவ வாய்ப்பு இருக்கிறது. சுரப்பு நீர் என்பது நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி உடலுறவு கொள்வதன் மூலம் சுரக்கும் நீர்களையும் குறிக்கும். பெரும்பாலான வைரஸ் மற்றும் பாக்டீரியா தொடர்பான நோய்களுக்கு தடுப்பூசி உள்ள நிலையில் இந்த நோய்க்கு அப்படி ஒன்று இல்லாதது ஏன் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. தடுப்பூசிகள் தயாரிப்பதின் அடிப்படையே நமது தற்காப்புப் படைகளாகிய அணுக்களுக்கு நோய்க்கிருமிகளை அடையாளம் கண்டு அழிக்கும் முறையைக் கற்பிப்பதுதான், ஆனால் இந்த நோயில் நேரடியாகப் பாதிக்கப்படுவது நமது தற்காப்பு படையே என்பதுதான் மிகப்பெரிய சவாலாக உள்ளது.
எச்.ஐ.வி நுண்கிருமியால் உடல் பலமற்றதாகி விட்ட நிலையில் ஏற்படுகின்ற நோய்களின் பிரதிபலிப்பு தான் எய்ட்ஸ் நிலை ஆகும். இந்நோய்கான அறிகுறிகளாக தொடர்ந்து சளி, இருமல், காய்ச்சல் வரும். தொடர்ந்து வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்போக்கு இருக்கும். தோலில் தடிப்பு ஏற்படும். எப்போதும் அசதியாகவும், களைப்பாகவும் இருக்கும்.நாளடைவில் எடை குறைந்து கொண்டே போகும்.தொற்றினை எலிசா என்ற நுட்பமான முதல் நிலை ரத்தச் சோதனை, அதன் ஆண்டிபாடிகளை கண்டறிய பயன்படுகிறது. தொற்றினை உறுதி செய்ய ‘வெஸ்டர்ன் பிளாட்‘ என்ற சோதனை உதவும். இந்த வியாதி வராமல் தடுப்பது எப்படி?
எய்ட்ஸ் நோய் கண்டவருக்குப் பயன்படுத்திய ஊசியை வேறு ஒருவருக்கு பயன்படுத்துவது என்ற வாய்ப்புகள் ஏறக்குறைய ஒழிக்கப்பட்டு விட்டன. ஒருமுறை பயன்பாடு ஊசிகள் ஒரு வரப்பிரசாதமே. அதே நேரத்தில் ஊசிமூலம் போதை மருந்துகள் பயன்படுத்தும் நபர்களுக்கு இதைப்பற்றிச் சிந்திக்க நேரம் இல்லாததால் அவர்கள் எளிதாக இதனைப் பெற்றுக் கொள்கிறார்கள். ரத்ததானம் நடைபெறும் எல்லாக் கட்டங்களிலும் தீவிரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதால் அந்த நிகழ்வுகள் மூலம் எய்ட்ஸ் பரவுவதைத் தடுத்தாகி விட்டது. எஞ்சியுள்ள காரணத்தில் தகாத பாலுறவில் பரவும் முறையே சவாலாக நிற்கிறது. பண்பட்ட ஒரு சமூகத்தில் எல்லோரும் கண்டிக்கக் கூடிய தகாத பாலுறவு, நடைமுறையில் அதிகம் நிலவுகிறது என்ற கசப்பான உண்மையை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற தனி மனித ஒழுக்கம் பேணப்படுவதன் மூலம் இந்த வியாதியை தவிர்க்கலாம். துணையை மட்டும் நேசி, எய்ட்ஸ் வருமா யோசி. திருமணமாகாதவர்கள், மணம் முடித்தவர்கள் என எல்லோரும் இந்த ஆபத்தை விலைக்கு வாங்கும் நிலையில் உள்ள போது, வள்ளுவர் காலத்திலேயே இது இருந்திருப்பதையும் அதை குறித்துப் பத்து குறட்பாக்கள் எழுதப் பட்டிருப்பதையும் உற்று நோக்க வேண்டும்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்” என்ற குறளை நெஞ்சில் நிறுத்த வேண்டும். திருமணமாகாமல் இருப்பவர்கள் உரிய பருவத்தில் திருமணம் முடிக்கவும், சீரான இல்வாழ்வு தொடங்கவும் முனைய வேண்டும். எய்ட்ஸ் வியாதி எவ்வாறு தொற்றும் என்பதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி அதற்கான புணர்ச்சி விதிமுறைகளை வகுக்க வேண்டும். பாதுகாப்பான உடல் உறவுகள் மற்றும் நடத்தைகள் விதிமுறைகள் பற்றிப் போதிக்க வேண்டும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்உயிர் மூச்சை உள்ளடக்கி, அரண் எனப்பட்டதே இல் வாழ்க்கை என்று வாழ்ந்தால் எய்ட்ஸ் என்னும் கொடிய அரக்கனை அண்ட விடாது, நோயற்ற நல வாழ்வு வாழலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *