அரசியல் குழப்ப நிலைக்கு முடிவுகட்டவே ஐ.தே.முன்னணிக்கு கூட்டமைப்பு ஆதரவு! – விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும் என சபையில் சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு

“நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்ப நிலைக்குத் தீர்வுகாணும் வகையிலேயே ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளது. மாறாக ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டமைப்பு இணையவில்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் சபையில் இன்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்று கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தது. கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், ஐக்கிய தேசிய முன்னணி பரிந்துரைக்கும் ஒருவர் பெரும்பான்மைப் பலத்துடன் பிரதமராக நியமிக்கப்படுவதற்கும் தாம் ஆதரவு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது கூட்டமைப்பின் எம்.பியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும்போது,

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தை நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஜனாதிபதி ஒத்திவைத்தார். அதன் பின்னர் நாடாளுமன்றம் கூடுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அதாவது நவம்பர் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வௌியிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்தச் செயற்பாடுகள் சட்டவிரோதமானவையாகவும், அரசமைப்புக்கு முரணானவையாகவும் அமைந்திருந்ததால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல தரப்புகள் மனுக்களைத் தாக்கல் செய்தன. முதன் முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் மனுவைத் தாக்கல் செய்தது.

எமது மனு உட்பட பல தரப்புகளின் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நவம்பர் 13ஆம் திகதி இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்தது.

இதனையடுத்து நாடாளுமன்றம் நவம்பர் 14ஆம் திகதி கூடியது. இன்று வரை சபை அமர்வுகள் நடைபெறுகின்றமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம். ஏனெனில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நாமே முதலில் மனுவைத் தாக்கல் செய்திருந்தோம். இதனால் நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டவர் (மஹிந்த ராஜபக்ஷ) நாடாளுமன்றத்தில் இன்னமும் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. அவரும் அவரின் சகாக்களுக்கும் சபை அமர்வுகளைப் புறக்கணித்து வருகின்றனர். அவருக்கு எதிராகவும், அவரது அமைச்சரவைக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் இந்தச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் நாட்டில் இன்று பிரதமர் இல்லை; அமைச்சரவை இல்லை; அரசு இல்லை.

இந்தக் குழப்ப நிலை மாற வேண்டும் என்பதற்காகவே கடந்த மாதம் 26ஆம் திகதிக்கு முன் ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைப்பதற்கு முடிவெடுத்துள்ளோம். அதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணி முன்மொழியும் ஒருவர் பெரும்பான்மைப் பலத்துடன் பிரதமராக நியமிக்கப்படுவதற்கும் நாம் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம்

இதுதான் எங்கள் நிலைப்பாடு. மாறாக நாம் ஐக்கிய தேசிய முன்னனிணியுடன் இணையவில்லை. எம்மை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். நாட்டின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்தில்கொண்டே நாம் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *