28 முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை – பரீட்சைகள் திணைக்களம் அதிரடி

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக,  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.    இது தொடர்பிலான  அறிக்கை ஒன்றை,  பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

நாளை 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை,  இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக,  பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தனி நபரோ  அல்லது நிறுவனமோ இந்தத் தடை உத்தரவைக்  கருத்திற்கொள்ளாது நடவடிக்கைகளை மேற்கொண்டால்,  அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாகக்  கருதப்படுவார் எனவும்,  பரீட்சைகள் திணைக்களம் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

யாரேனும் ஒருவர்  இவ்வாறான தடை உத்தரவை மீறி நடந்தால், 1911 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறும்,  பரீட்சைகள் திணைக்களத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 011 2784208 , 011 2784537, 011 3188350 அல்லது
011 3140314 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டும் இதனை  அறிவிக்க முடியும்.
மேலும், முறைகேடுகள் இடம்பெறும் பட்சத்தில்,  அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என்றும்,  பரீட்சைகள் திணைக்களம்  மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
நாடளாவிய ரீதியில்,  இம்முறை 6 இலட்சத்து 50 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் இப்பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.

மேலும்,  இப்பரீட்சை, 4661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன்,  இப்பரீட்சைக்காக 541 இணைப்பு நிலையங்களும்,  33 பிராந்திய நிலையங்களாகக் கொண்டு இப்பரீட்சையை  நடாத்துவதற்குத்  திட்டமிட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *