சுங்க திணைக்களத்துக்கு மிரட்டல் விடுத்தாரா மஹிந்த?

சட்டவிரோதமாக டொலர்களை நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குக் கொண்டுசெல்வதற்கு முயற்சித்த நபரை விடுவிப்பதற்கு நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவினால், இலங்கை சுங்கத்திற்கு அழுத்தம் என்ற ரீதியில் இணையத்தளத்திலும் ஊடகங்களிலும் வெளியான செய்தி தொடர்பில் நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதுதொடர்பாக நிதி மற்றும் பொருளாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:.

இலங்கையிலிருந்து வெளிநாடு சென்ற வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து ,53,455 அமெரிக்க டொலரகள், இலங்கை சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்டது.

ஈரானிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் செயற்படுத்தப்படும் உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தில் சேவையாற்றும் ஈரானைச் சேர்ந்த ஒருவர் தனது மாதாந்த சம்பளத்தை இவ்வாறு கொண்டுசெல்ல முயற்சித்த வேளையிலேயே கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்கப்பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டவர் தமது சம்பள பணத்தை இவ்வாறு கொண்டுசெல்வது தொடர்பில் மனிதாபத்துடன் கவனம் செலுத்துமாறு 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி இலங்கைக்கான ஈரான் தூதுவர் நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைவாக , இலங்கை சுங்கத் திணைக்களத்தின் 164 ஆவது சரத்தின்படி, நிதியமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக தூதரகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் ஆராய்ந்து, 53,455 அமெரிக் டொலர்களை குறித்த நபருக்கு மீண்டும் வழங்குமாறு, நிதி மற்றும் பொருளாதார அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸவினால் இலங்கை சுங்கப்பிரிவுக்கு பணிப்புரைவிடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பணியாற்றும் வெளிநாட்டவர் பணம் கொண்டுசென்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவல்ல இதற்கு முன்பும் வெளிநாட்டு நாணயங்கள் கொண்டுசெல்லப்பட்ட சந்தர்ப்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட போது நிதி அமைச்சினால் 2018 ஆம் ஆண்டு ஜீன் மாதம் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *