8 மணி நேரம்… 230 கி.மீ தூரம்… குழந்தையின் சடலத்தை பேருந்தில் சுமந்து வந்த தந்தை!

ஜம்மு காஷ்மீரில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் குழந்தையின் சடலத்தை பஸ்ஸில் எடுத்து வந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் பகுதியில் உள்ள குச்சால் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது சுல்தான். கூலித்தொழிலாளியான இவருக்கு மனான் என்ற 2 வயது ஆண் குழந்தை இருந்தது. சில நாட்களுக்கு முன்பு மனானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

சிகிச்சைக்காக கிஷ்த்வார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவனுக்கு நிமோனியா நோய் இருப்பதை உறுதி செய்தனர். ஆனால் இந்த நோய்க்குச் சிகிச்சை அளிக்கக்கூடிய அளவுக்கு மருத்துவ வசதிகள் அந்த மருத்துவமனையில் இல்லாததால் சிறுவனை ஜம்மூவுக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதன்படி மனானை அழைத்துக் கொண்டு ஜம்மு குழந்தைகள் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார் சுல்தான். ஆனால் அங்கும் சிகிச்சை பலனளிக்காதல் சிறுவன் மனான் பரிதாபமாக உயிரிழந்தான். மனானின் பிரிவைத் தாங்க முடியாமல் சுல்தான் உட்பட மொத்தம் குடும்பமும் சோகத்தில் மூழ்கியது. மனானின் இறப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக அமைந்தது தான் பெரும் துயர். கிஷ்த்வார் மருத்துவமனையில் இருந்து ஜம்மூவுக்கு குழந்தையை கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவர்கள் கூறியவுடன் அவசர ஆம்புலன்ஸ் சேவையை அணுகியுள்ளார் சுல்தான். காரணம் கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு 230 கி.மீ தொலைவில் உள்ளது.

சுமார் 8 மணி நேரம் மட்டும் பயணம் செய்ய வேண்டி இருக்கும். ஆம்புலன்ஸில் சென்றால் சீக்கிரமாக சென்றுவிடலாம் என்று எண்ணியே அவசர ஆம்புலன்ஸ் சேவையை அணுகியுள்ளார். ஆனால் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வேண்டுமென்றால் பெட்ரோலுக்கு உரியப் பணத்தை செலுத்த வேண்டும்.

அப்போது தான் மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸை அனுப்பும். வறுமையான குடும்பத்தில் பிறந்து கூலி வேலை செய்து வரும் சுல்தானிடமோ அந்த அளவுக்குப் பணம் கிடையாது. இருப்பினும் தனது மகனுக்காக மருத்துவமனை நிர்வாகத்திடம் கெஞ்சியுள்ளார். நிலைமையைப் புரிந்துகொள்ள மருத்துவமனை நிர்வாகமோ, மனிதாபிமானம் இல்லாமல் குழந்தையின் சடலத்தை பஸ்ஸில் எடுத்துச் செல்ல வற்புறுத்தியுள்ளது. இதன்பின்னர் உள்ளூர் சமூக சேவை அமைப்பு மூலமாகப் பணம் திரட்டி சாதாரண ஆம்புலன்ஸ் மூலமாக ஜம்மு சென்றுள்ளனர்.

30 வருடம் கூலித்தொழிலாளியாக இருந்து பல மணி நேரம் சுமைகளை தூக்கிய சுல்தான் தனது குழந்தையின் சடலத்தையும் தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *