ரணகளமானது நாடாளுமன்றம்- சபைக்குள் இன்று நடந்து என்ன? ( முழுவிபரம் இணைப்பு)

சபாபீடத்தை முற்றுகையிட்டு, அக்கிராசனத்தைக் கைப்பற்றி – சபை அமர்வை முடக்கும் செயலில் மஹிந்த அணி இறங்கியதால் நாடாளுமன்றம் இன்று ( 16) இரண்டாவது நாளாகவும் ரணகளமானது.


கடும் கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் பொலிஸாரின் மனிதச்சங்கிலி பாதுகாப்புடன் அவைக்கு வந்த சபாநாயகர்மீது, கூட்டுஎதிரணி எம்.பிக்கள் ‘பைல்களை’ வீசி தாக்குதல் நடத்தியதுடன், பொலிஸார்மீதும் மிளகாய்த் தூள் கலந்த தண்ணீரை பீச்சியடித்தனர்.

முன்கூட்டியே அவைக்குள்வந்து
முற்றுகையிட்ட மஹிந்தஅணி

நாடாளுமன்றம் (15) நேற்று வன்முறைக்களமாக மாறியதால் பெரும் பரபரப்புக்கு மத்தியிலேயே இன்று ( 16) பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடவிருந்தது. 1.25 மணியளவில் அழைப்பு மணி ஒலிக்கவிடப்பட்டது.

முன்கூட்டியே சபைக்குள் நுழைந்த மஹிந்த அணி எம்.பிக்கள், சபாபீடத்தை சுற்றிவளைத்தனர். சபாநாயகரின் ஆசனமும் ஆக்கிரமிக்கப்பட்டது. அதில் அருந்திக்க பெர்ணாண்டோ எம்.பி. அமர்த்தப்பட்டார்.

கத்தியுடன் களமிறங்கியிருந்த, பாலித தெவரப்பெரும எம்.பியை உடனடியாகக் கைதுசெய்யுமாறு கூட்டுஎதிரணி எம்.பிக்கள் கோஷம் எழுப்பினர். இடையிடையே சபாநாயகர்மீதும் சொற்தாக்குதல் தொடுத்தனர்.

ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியவற்றின் எம்.பிக்கள் அவ்வேளையில் சபைக்குள் இருந்தாலும், எவ்வித குழப்பங்களிலும் ஈடுபடவில்லை.

சபைக்குள் நடப்பவற்றை, வெளிநாட்டு தூதுவர்களும், இராஜதந்திரிகளும், அரசியல் கொள்கை வகுப்பாளர்களும் உன்னிப்பாக அவதானித்தனர். இன்றைய தினமும் பார்வையாளர் கலரியிலும், சபாநாயகர் கலரியியும் ஆட்கள் வழிந்து நிரம்பினர்.

மனிதசங்கிலி பாதுகாப்பு அமைத்து
சபாநாயகரை அழைத்துவந்த பொலிஸார்

2.15 மணி கடந்தும் மஹிந்த அணியின் கூச்சல், குழப்பம் நீடித்ததால் பொலிஸ் பாதுகாப்பு சகிதமே சபாநாயகர் சபைக்கு வந்தார். 50 இற்கும் மேற்பட்ட பொலிஸார் மனிதசங்கிலி பாதுகாப்பளித்து சபாநாயகரை அழைத்துவந்தனர்.

இதைகண்ட மஹிந்தவின் சகாக்கள் பொங்கியெழுந்து, கதிரையொன்றை தூக்கி பொலிஸாரை தாக்க முற்பட்டனர். உடனடியாக வெளியேறுமாறு பொலிஸாரை அச்சுறுத்தியுதுடன், கைகலப்பிலும் ஈடுபட்டனர். கடும்தொனியிலும் உரையாற்றினர்.

எனினும், முன்வைத்த காலை பொலிஸார் பின்வைக்கவில்லை. இதையடுத்தே அவர்கள்மீது மிளகாய்த்தூள் கலந்த தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது. அரசமைப்பு, நாடாளுமன்ற நிலையியற்கட்டளை புத்தகம் என முக்கிய ஆவணங்களாலும் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

அக்கிராசனமும் அவசர அவசரமாக தூக்கிச்செல்லப்பட்டது. இதை கண்டிக்கும் வகையில் ஐ.தே.க. எம்.பிக்களும் கூச்சலிட்டனர்.
சபாபீடமானது முழுமையாக மஹிந்த அணியின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததால், அவைக்குள் பிரிதொரு இடத்தில் அமரவேண்டியநிலை சபாநாயகருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்குரிய நிலையியற்கட்டளையை தளர்த்துவதற்கான யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் முன்வைக்க, அதை விஜித்த ஹேரத் வழிமொழிந்தார்.

கண்கண்ட சாட்சியின் அடிப்படையில் குறித்த யோசனை நிறைவேற்றப்பட்டபின்னர், ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவால், பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் புதிய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அதையும் விஜித்த ஹேரத் எம்.பி. வழிமொழிந்தார். பெரும் கூச்சல், குழப்பத்துக்கு மத்தியில் கண்கண்ட சாட்சியின் அடிப்படையில் அது நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்தான அறிவிப்பைவிடுத்த சபாநாயகர், நாடாளுமன்றத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி ஒருமணிவரை ஒத்திவைத்துவிட்டு, பாதுகாப்பாக வெளியேறினார்.

இதனால், கடுப்பாகிய மஹிந்த அணி, சபாபீடத்துக்கு அருகில் இருந்த மேசைகளை பிரட்டி, ஐ.தே.க, ஜே.வி.பி, கூட்டமைப்பு உறுப்பினர்கள்மீது ஆவணங்களை தூக்கியெறிந்து தாக்குதல் நடத்தியதுடன், மிளகாய்த்தூள் கலந்த தண்ணீரையும் வீசியடித்தனர்.

 

ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, மலிக்சமரவிக்கிரம, ஜே.வி.பியின் எம்.பி., விஜித்த ஹேரத் ஆகியோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். நாடாளுமன்ற வளாகத்திலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றனர்.

பிரேரணை நிறைவேறும்வரை மௌனம்காத்த ஐக்கிய தேசியக்கட்சி எம்.பிக்கள், பிரேரணை நிறைவேறிய பின்னர் பதிலடி கொடுக்கும் வகையில் மஹிந்த அணிக்கு எதிராக குரல்எழுப்பினர். பார்வையாளர் கலரியிலிருந்த ஐ.தே.க. ஆதரவாளர்களும், கூட்டுஎதிரணி உறுப்பினர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

புதிய அரசு நம்பிக்கையிழந்துவிட்டதாகவும், பிரதமர் பதவியை மஹிந்த வகிக்கமுடியாது என்றும் பிரதான கட்சிகள் வலியுறுத்திவரும் நிலையில, முறையற்ற விதத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்கமுடியாது என மஹிந்த அணி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *