மைத்திரிக்கு எதிரான ஆட்டத்தை ஆரம்பித்தார் ரணில் – கொழும்பில் திரண்டது யானைப்படை!

தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. ஜனநாயக விரோதச்செயலுக்கு எதிராகவே போராடினோம். ஜனாதிபதித் தேர்தலாக இருந்தால் என்ன, பொதுத்தேர்தலாக இருந்தால் என்ன அனைத்துக்கும் முகங்கொடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவித்தார்.

மீண்டும் தம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைக்கக் கோரி ஐக்கிய தேசிய முன்னணி இன்று பிற்பகல் கொழும்பில் பாரிய பேரணி ஒன்றை நடத்தியது.

கொழும்பு – லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகிய இந்தப் பேரணியில், பல்லாயிரக்கணக்கான ஐதேக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ரணில் மேலும் கூறியதாவது,

” இலங்கை வரலாற்றில் எல்லோரும் பாராளுமன்றத்தை மதித்தனர். இந்த ஜனாதிபதியே எட்டி உதைத்தார். பாராளுமன்றத்தில் ஆதரவு இருந்தால் நம்பிக்கை பிரேரணை ஒன்றை ஏன் இவர்கள் கொண்டுவரவில்லை? சபாநாயகரின் முடிவை ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள வேண்டும். நிராகரிக்க முடியாது. பாராளுமன்றத்தில் சவால் இல்லாவிட்டால் மட்டுமே சிறுபான்மை அரசு ஒன்றை கொண்டு செல்லலாம்.

 ஜனாதிபதி தேர்தலையும் பொது தேர்தலையும் ஒன்றாக நாம் எதிர்கொள்ள தயார். அரசியலமைப்பின்படி நாங்கள் செயற்படுவோம். சிறிசேன – ராஜபக்ச குழு பாராளுமன்றத்தில் தோற்று நிற்கிறது . சபாநாயகரை பாதுகாத்து ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் தயார். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் நான் தலைவணங்குகிறேன் .” என்றார்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *