இன்று காலை மீண்டும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் உயர்நீதிமன்றம்!

நாடாளுமன்றத்தைக் கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு சட்டவிரோதமானது என்றும், பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரியும், தாக்கல் செய்யப்பட்ட 17 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்றும் நடைபெறவுள்ளன.

நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்கள் நேற்று பிற்பகல் 2 மணியளவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான சட்டவாளர்கள் தமது வாதங்களை முன்வைத்தனர்.

எனினும், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய கால அவகாசம் கோரியதால், இந்த மனுக்கள் மீதான விசாரணையை பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையி்லான மூன்று நீதியரசர்கள் குழு, இன்று காலை 10 மணிவரை ஒத்திவைத்தது.

இந்தநிலையில், இன்று காலை மீண்டும் விசாரணைகள் ஆரம்பமாகும்.

இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்படும் இந்த வழக்கு, ஒட்டுமொத்த இலங்கைத் தீவை மாத்திரமன்றி, உலகத்தின் கவனத்தையும் உயர்நீதிமன்றத்தின் மீது திருப்பியுள்ளது.

சட்டப்போரில் சட்ட நிபுணர்கள்

சிறிலங்காவின் மிகச்சிறந்த அரசியலமைப்பு சட்டவாளர்கள் இந்த மனுக்களின் சார்பில் வாதிடுகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சட்டவாளர் கனக ஈஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் சார்பில் ஹஜிஸ் ஹிஸ்புல்லாவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் றொனால்ட் பெரேரா, சுரேன் பெர்னான்டோ ஆகியோரின் உதவியுடன் திலக் மாரப்பன ஆகிய சட்டவாளர்கள் நேற்று நீதிமன்றில் முன்னிலையாகினர்.

இவர்களைத் தவிர கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, லால் விஜேநாயக்க, ஜே.சி.வெலியமுன உள்ளிட்ட சட்ட விற்பன்னர்களும் உயர்நீதிமன்றில் நேற்று முன்னிலையாகினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *