மைத்திரியை எதிர்த்து நாட்டைக் காப்பாற்ற முயன்றமைக்காக எதனையும் எதிர்கொள்ள நான் தயார்! – கடாசித்தள்ளினார் கரு

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்து நாடாளுமன்றத்தின் உரிமைகளையும் அரசமைப்பின் ஆதிபத்தியத்தையும் மக்களின் இறைமையையும் காப்பற்ற முயன்றமைக்காக எந்த விளைவுகளையும் தயக்கமின்றி எதிர்கொள்ள நான் தயார்.”

– இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பரபரப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு சபாநாயகர் பதவியில் இருந்த கரு ஜயசூரியவின் நடுநிலைப் போக்கின்மையும் ஒரு காரணமாக அமைகின்றது என மைத்திரி – மஹிந்த கூட்டணியினர் பகிரங்கமாக கருத்து வெளியிட்டு வரும் நிலையிலேயே கரு ஜயசூரிய இந்தக் காட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பல கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லப்போவதாகத் தெரிவித்தனர். நாடாளுமன்றம் ஜனாதிபதியின் நடவடிக்கையின் சட்டபூர்வத்தன்மை குறித்து தீர்மானிப்பதை, ஜனாதிபதி தடுத்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை சட்டபூர்வமானதா என்பதை உயர் நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும்.

நாடாளுமன்றத்தின் பாதுகாவலன் என்ற அடிப்படையில் நான் கடந்த இரண்டு வார காலமாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் உரிமைகளை பறித்ததையும் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்களை முடக்கியதையும் பார்த்துள்ளேன்.

இலங்கையின் இறைமையின் இயந்திரமான நாடாளுமன்றம் குறித்து ஜனாதிபதி வெளிப்படுத்திய வேண்டுமென்ற அலட்சியம் காரணமாக இலங்கையின் சாதாரண பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் இதேபோன்று முறைகேடுகளுக்கு உள்ளாகக் கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் அரசமைப்பை பாதுகாப்போம் என சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைத்து அரச பணியாளர்களையும் அந்தச் சத்தியப் பிரமாணம் குறித்து சிந்திக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நாங்கள் ஏன் அரசமைப்பு என்ற ஆவணத்திற்கு கட்டுப்படவேண்டும், ஏன் தனியொரு மனிதருக்கோ அதிகாரத்திலுள்ளவர்களுக்கோ கட்டுப்படக்கூடாது என எங்களை நாங்களே கேள்வி கேட்கவேண்டும். எங்களது தலையாய கடமை என்பது அரசமைப்புக்கே உரியது.

நாட்டின் அனைத்து அரச பணியாளர்களையும் எங்கள் தாய் மண்ணின் அதிஉயர் சட்டத்துக்கான தங்கள் கடப்பாடுகளை நினைத்துப் பார்க்குமாறும் பொதுச் சேவை பொலிஸ் சேவை மற்றும் நீதித் துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அரச ஊழியர்களை அவர்களுக்கு கிடைக்கும் சட்டவிரோதமான உத்தரவுகளை நடைமுறைப்படுத்த மறுக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். அரசமைப்பின் கீழ் கடப்பாடுகள் வழங்கப்பட்டுள்ள அனைத்துக் குடிமக்களும் நாடு குறித்தே முதலில் சிந்திக்கவேண்டும். கட்சி அல்லது தனிப்பட்ட தொடர்புகள் குறித்து சிந்திக்க கூடாது. எமது நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் அனைவரும் தேசப்பற்றுடனும் சுதந்திரமாகவும செயற்படவேண்டும்.

நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவிருந்தவேளை ஜனாதிபதி உரையாற்றுவதை நான் தடுக்கமுயன்றேன் எனப் போலியான வெளிவிவகார அமைச்சரும் நன்கு மதிக்கப்பட்ட அரசியல்வாதியுமானவர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை குறித்து அறிந்து நான் கவலையடைந்தேன். இவ்வாறான அனுமானத்தை முன்வைத்துள்ள அமைச்சர் இதன் காரணமாகவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

நான் குறிப்பிட்ட அமைச்சர் தனது சகாக்களின் நடவடிக்கைள் குறித்து நேர்மையான நம்பத்தகுந்த காரணங்களை முன்வைத்திருந்தால் அது சர்வதேச சமூகத்தின் மத்தியில் எங்கள் நாடு அவமானப்படுவதை குறைத்திருக்கும் என நான் கருதுகின்றேன். அவரது கட்டுக்கதையை அடிப்படையாக வைத்து அவரது சகாக்கள் பலர் என்னைச் சிறைக்கு அனுப்பபோவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சபாநாயகரினதும் நாடாளுமன்றத்தினதும் செயற்பாடுகள் எப்போதும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைவாகக் காணப்படாது. 1641இல் பொதுச் சபையின் சபாநாயகர் தனது உறுப்பினர்கள் முதலாம் சாள்ஸ் மன்னனால் கைதுசெய்யப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாத்தது முதல் நாடாளுமன்றத்தின் இந்தச் சுதந்திரம் காணப்படுகின்றது.

அரசின் சட்டபூர்வதன்மை குறித்த வாக்கெடுப்பை நடத்துமாறு நாடாளுமன்றத்தின் 124 உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். 116 உறுப்பினர்கள் என்னைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர், ஏனைய 8 உறுப்பினர்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு இந்த அழைப்பை விடுத்தனர்.

நாடாளுமன்றத்தின் சபாநாயகர்கள் முன்னர் நடந்துகொண்டது போல நானும் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை ஏற்று வாக்கெடுப்பை நடத்த அனுமதிப்பேன் எனத் தெரிவித்தேன். அரசின் கொள்கை விளக்கவுரையை நிறுத்துமாறு எந்த உறுப்பினரும் கேட்டுக்கொள்ளவில்லை நானும் அதனை ஏற்றுக்கொண்டிருக்கமாட்டேன்” – என்றுள்ளது.

சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கரு ஜயசூரிய ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை இந்தச் செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *