14 ஆம் திகதி ஜனாதிபதியே அக்கிராசனத்தில் அமர்வார் – நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தமுடியாது!
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை என்று ஆளுந்தரப்பு பேச்சாளரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஜனாதிபதியால் இரண்டாவது நாடாளுமன்றக்கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் எதிர்வரும் 14 ஆம் திகதி மூன்றாவது கூட்டத்தொடர் சம்பிரதாயபூர்வமாக ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்படும்.
அன்றையதினம் சபாபீடத்திலுள்ள தலைமைஆசனத்தில் ஜனாதிபதியே அமர்ந்திருப்பார். சபையை ஒத்திவைப்பதற்குரிய யோசனையை முன்வைக்குமாறு சபை முதல்வரிடம் அவர்கோருவார்.
அவ்வாறு சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தமுடியாது. எனினும், நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கலாம்.
அதன்பின்னர் அது நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் உள்ளடக்கப்படும். விவாதிப்பதற்குரிய திகதியை கட்சித் தலைவர்களே தீர்மானிப்பார்கள். எனவே, 14 ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய தேவையில்லை” என்றும் அவர் கூறினார்.