சிவசக்தியிடம் 500 கோடி ரூபா கோரி சரவணபவன் எம்.பி. மானநஷ்ட வழக்கு!

மஹிந்த அரசுடன் இணைவதற்குப் பதிலாக அமைச்சுப் பதவியையும் பணத்தையும் கோரியதாக சக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட கருத்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் முற்றாக நிராகரித்துள்ளார்.

“கூட்டமைப்பின் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியவரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் முக்கியஸ்தருமான சிவசக்தி ஆனந்தனின் பொய்யான இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராகக் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன். உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து 300 இலிருந்து 500 கோடி ரூபா வரையான மானநஷ்டமும் கோரவுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூலம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட சிவசக்தி ஆனந்தன் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுக்களை எம்மீது சுமத்துவதே அவருக்கு வழமையாகிப்போய்விட்டது.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலத்தில் கூட அரசால் எமக்கு அபிவிருத்திக்கு வழங்கப்பட்ட 20 மில்லியன் ரூபாவை நாம் அரசிடமிருந்து இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டுள்ளோம் என்று தெரிவித்திருந்தார். நாம் அவ்வாறு பெறவில்லையாயினும், அந்த நேரத்தில் அவரது குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எடுபட்டு அவர் அதில் வெற்றியும் கண்டார். நாம் அதை நிரூபிப்பதற்குச் சற்றுக் காலம் எடுத்தது.

சிவசக்தி ஆனந்தனும் அவரது கட்சியும் கடந்த காலங்களில் மஹிந்தவுடன் செயற்பட்டவர்கள். அவர்தான் மஹிந்தவிடம் கோடிகளைப் பெற்றுச் செல்லப்போகின்றார் போல. அதற்காகத் துணைக்கு ஏன் எம்மையும் இழுப்பான். அவர் போகட்டும். கடந்த காலத்தில் அவரது கட்சித் தலைவர் மஹிந்தவுக்குச் செயலாளராகக் கடமையாற்றியவர்.

சிவசக்தி ஆனந்தனுக்கு என்றால் என்ன அவரது கட்சிக்கு என்றால் என்ன உண்மை, நேர்மை என்பது அறவே கிடையாது. இவர் என் மீதான குற்றச்சாட்டை தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்தார். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளன.

என் மீது அக்கறையுள்ள பலர் என்னை வழக்குத் தாக்கல் செய்யுமாறு வேண்டினார்கள். தற்போதுதான் எனது சட்டத்தரணிகள் அதற்குரிய பத்திரிகைகளைத் தயாரித்துள்ளார்கள். நிச்சயமாக உரிய நடவடிக்கையை அவர் மீது எடுப்பேன்.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 300 கோடி ரூபாவில் இருந்து 500 கோடி ரூபா வரை மானநஷ்டம் கோருவதாக எண்ணியுள்ளேன்” – என்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அதிரடியாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளார்.

இதற்காக ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மஹிந்தவாதிகள் பேரம் பேசி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படும் நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் பிரதி அமைச்சராகப் பதவியேற்றிருந்தார்.

இந்தநிலையில் மஹிந்தவின் அரசுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்குப் பதிலாக அமைச்சுப் பதவி, பணம் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர் என்று சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார் என்று அவரின் குரல் பதிவுடன் தமிழ் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மறுத்துள்ள நிலையில், தம் மீது சிவசக்தி ஆனந்தன் முன்வைத்த குற்றச்சாட்டை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சவரணபவனும் நிராகரித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்குப் பதிலாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சுப் பதவி, 30 கோடி ரூபா பணம் மற்றும் டக்ளஸ் தேவானந்தாவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீளப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை சரவணபவன் கோரியுள்ளார் என தமிழ் ஊடகம் ஒன்றுடன் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலில் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *