அரசியல் குழப்ப நிலைக்கு விரைந்து தீர்வு காணுங்கள்! – மைத்திரிக்கு ஐ.நா. கடும் அழுத்தம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை விரைவில் தீர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் வலியுறுத்திக் கூறியுள்ளது ஐ.நா.

ஜனாதிபதியை அவரது இல்லத்தில் இன்று புதன்கிழமை சந்தித்துப் பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் அம்மையார் இவ்விடயத்தை வலியுறுத்தினார்.

ஜனாதிபதிக்கும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை அடுத்து, அரசமைப்பின் பிரகாரம் செயற்படுமாறு இலங்கைக்கு மேற்குலகம் உட்படச் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஜனாதிபதி மைத்திரிபாலவால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவையும் அந்த நாடுகளின் தூதுவர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைகளால் சீற்றமடைந்துள்ள மேற்குலகமும், ஐ.நா. தரப்புகளும் இலங்கை மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தயாராகி வருகின்றன எனச் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையிலேயே இன்று ஜனாதிபதிக்கும் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிக்கும் இடையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பில் ஜனாதிபதி ஐ.நா. வதிவிடப் பிரதிநிதிக்குத் தெளிவுபடுத்தியதுடன், அரசின் சகல நடவடிக்கைகளும் அரசமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

மேலும் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்புக்குள் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகளையும் பாராட்டினார்.

இவற்றைச் செவிமடுத்த ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி, அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையைத் தீர்த்து அபிவிருத்தியின்பால் கவனம் செலுத்தவேண்டுமென வலியுறுத்தினார்.

இலங்கைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் ஐ.நா. தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *