அலரி மாளிகையில் இருந்து வெளியேற ரணிலுக்கு நாளை காலை 8 மணி வரை காலக்கெடு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் காலக்கெடு விதித்துள்ளது.
கொழும்பில் இன்று மஹிந்த அணியின் பங்காளித் தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை அறிவித்தார்.
நாளை காலை 8 மணிக்குள் அலரி மாளிகையை விட்டு ரணில் விக்கிரமசிங்க வெளியேறாவிட்டால், அவரை அங்கிருந்து அகற்ற நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதற்கு எந்த உடன்பாடு செய்து கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது நிலையை உறுதி செய்து கொள்வதற்கும், அவரது திட்டங்களை வகுத்துக் கொள்வதற்கும் கால அவகாசம் வழங்கும் வகையிலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி முடக்கியுள்ளார் என்று இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருக்கின்றது எனவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இருந்தால், ஐக்கிய தேசியக் கட்சி அதனை எதிர்வரும் 16ஆம் திகதி நிரூபித்து விட்டு அரசைப் பொறுப்பேற்கட்டும் என்றும் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ஆறுமுகன் தொண்டமான், தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்க ஜனாதிபதியும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இணங்கியதால் தான், அவருக்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பதாகக் கூறினார்.
அதேவேளை, ஐ.தே.கவில் இருந்து கட்சி தாவியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகேயும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார்.
ஐ.தே.கவைச் சேர்ந்த மேலும் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வெளிப்படுத்துவர் என்றும், அவர்களின் பெயர்களை வெளியிட வேண்டாம் என்றும், அவர்களின் பாதுகாப்பை தன்னால் இன்னமும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் பிரதமர் மஹிந்த தன்னிடம் கூறியிருப்பதாகவும் ஆனந்த அளுத்கமகே கூறினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து ஜனாதிபதி அரசமைப்பின்படியே நீக்கினார் என்று தெரிவித்தார்.
“தேசிய அரசில் உள்ள கட்சி ஒன்று அரசில் இருந்து விலகிய போது, அமைச்சரவையின் பதவிக்காலம் முடிவுக்கு வரும். அதுவே, பிரதமரின் பதவிக்காலத்தை இரத்துச் செய்ய வழிவகுத்தது.
அமைச்சரவை தொடர்ந்து செயற்படும்போது மட்டுமே, பிரதமரால் செயற்பட முடியும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசிய அரசில் இருந்து விலகியதை அடுத்து, ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதமராக செயற்பட முடியாது” – என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.