உகண்டாவிற்கு சென்ற புலிகளிடம் இருந்து கைப்பற்றிய சொத்துக்களை கொண்டு வருமாறு கோரிக்கை!

ராஜபக்சர்களால் உகண்டாவிற்கு கொண்டு சென்ற விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கங்கள் மற்றும் டொலர்கள் மற்றும்  கே.பியிடம் இருந்து மீட்கப்பட்ட கப்பல்களை மீட்டு நாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வடகிழக்கு இணைப்பு செயலாளர் கோல்டன் பெணான்டே தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – செங்கலடியில் இன்று இடம்பெற்ற கோட்டா கோ கோம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இன்று இந்த போராட்டத்துக்கு முக்கியமான காரணம் நமது நாட்டில் டொலர் இல்லாதது தான். எனவே ஏன் டொலர் இல்லாது போனது என காரணம் பார்த்தால் மகிந்த ராஜபக்ச தான் இதில் முக்கியமான காரணம். கடந்த யுத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் பகுதியிலிருந்த தங்கங்களை எடுத்து உலங்குவானுர்திகளில் கொண்டு சென்று அதனை உகண்டாவிற்கு அனுப்பியுள்ளனர்.

இதனை இந்த மக்களிடம் கேட்டால் கூட அப்பிடியே தெரிவிக்கின்றனர். அதேபோல விடுதலைப் புலிகளிடம் இருந்த அதிகமான கப்பல்கள் கே.பி என்பவரிடம் இருந்தது. அந்த கப்பல்களை அவரிடமிருந்து மீட்டு அதனை ராஜபக்சவின் உறவினரது பெயரில் வேறு வேறு நாடுகளில் வைத்திருக்கின்றனர்.

அவ்வாறே வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அபிவிருத்தி திட்டத்துக்கு என நூறு பில்லியன் டொலர் வந்தால் அதனை அந்த நாட்டிலே ஒப்பந்தம் போட்டு அரைவாசியை அவர்கள் எடுத்துக் கொண்டு அரைவாசியை மட்டும் தான் இங்கு வந்தது.

அவ்வாறு தான் உகண்டாவிற்கு டொலர் எல்லாம் கொண்டுசெல்லப்பட்டது. இவற்றுக்கு எல்லாம் முக்கியமானவர் மகிந்த ராஜபக்ச உட்பட அவரது குடும்பமே. இவர்கள் கடும் கள்வர்கள், இவர்களை சிறைக்கு அனுப்பிவிட்டு உகண்டால் உள்ள தங்கம் எல்லாம் திருப்பி எடுத்துவரவேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *