நாளை கலைகின்றது வடக்கு மாகாண அரசு! – இறுதி அமர்வு இன்று

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பதவியேற்ற முதலாவது வடக்கு மாகாண சபையின் பதவிக் காலம் நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது.

இந்நிலையில் சபையின் இறுதி அமர்வு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் பிறந்த தினமான இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகின்றது.

கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு இறுதி அமர்வு ஆரம்பமாகும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 10 ஆம் திகதி பதவியேற்ற இந்தச் சபையின் ஐந்து ஆண்டு காலம் நாளை நிறைவுக்கு வருகின்றது.

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இருந்து பிரிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாண சபைக்காக முதன் முதலாக நடத்தப்பட்ட தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கின் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. இலங்கை நீதித்துறையில் முக்கிய பதவிகளில் ஒன்றான நீதியரசர் பதவியை வகித்து ஓய்வுபெற்ற முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று வடக்கின் முதலமைச்சரானார்.

பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் பதவியேற்ற வடக்கு மாகாண சபைக்குள் சிறிது காலத்திலேயே சிக்கல்கள் எழத் தொடங்கின. கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட முதலமைச்சருக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையே மோதல் போக்கு எழுந்தது. தமிழரசுக் கட்சியின் கட்டுபாட்டை மீறி முதலமைச்சர் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக ஊழல் மோசடிகள், மாகாண அமைச்சர்கள் பதவி நீக்கம் உட்பட மேலும் சில விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையே பெரும் முரண்பாடு எழுந்தது.

ஒரு கட்டத்தில் முதலமைச்சருக்கு எதிராக மாகாண சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுப்பட்டது. இதனால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து அந்தப் பிரேரணை பின்னர் கைவிடப்பட்டிருந்தது.

இதனை அடுத்து கூட்டமைப்புக்கும் முதலமைச்சருக்கும் இடையிலான மோதல் நிலை மேலும் வலுத்தது. இரு தரப்பினரும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

கூட்டமைப்புக்கும் முதலமைச்சருக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்தப் பல தரப்பினரும் முயன்றபோதும் அந்த முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.

முரண்பாடுகள் தொடர்ந்த நிலையில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலகித் தனிக் கட்சி அமைப்பரா அல்லது கூட்டமைப்புடன் தொடர்ந்தும் இணைந்திருப்பரா அல்லது மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பரா என்பது தொடர்பில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

அதேபோன்று அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் நிறுத்தப்படுவாரா அல்லது வேறொருவர் அந்த இடத்துக்குக் கொண்டுவரப்படுவாரா என்பது குறித்தும் பரவலான எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், தனது அரசியல் எதிர்காலம் குறித்து மாகாண சபையின் நிறைவு நாளான நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன் என முதலமைச்ச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

இந்தச் சர்ச்சைகளுக்கு மத்தியில் வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடக்கின்றது.

சபை பதவியேற்ற காலம் முதல் இது வரை 134 அமர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஆயினும், சபையின் இறுதி அமர்வான இன்றைய தினமே சபையில் முதலாவது விடயமாக சபைக்கான கீதம் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட இருக்கின்றது.

அதன் பின்னர் முதலமைச்சர் உட்பட உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைச் சொல்வதற்கு வாய்ப்பளிக்கப்படும்.

அதற்கமையப் போதுமானவரை நேரக் கட்டுப்பாட்டோடு அனைவரதும் செயற்பாடுகள் அங்கீகரிக்கப்படும். இவ்வாறுதான் நிகழ்ச்சி நிரல்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்தார்.

சபையில் உறுப்பினர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளுக்குப் பெரியளவில் இடம் இல்லாவிட்டாலும் சில விளக்கங்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும். அந்தச் சந்தரப்பங்களில் அவர்கள் தங்களது சுருக்கமான விளக்கங்களை வழங்கவேண்டும் என்றும் சிவஞானம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *