அமைச்சரவை ‘லீக்கர்ஸ்;’ குறித்து விசாரணை தேவை – சு.க. வலியுறுத்து
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலைசெய்வதற்கு ‘றோ’ அமைப்பு திட்டம் தீட்டுவதாக ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார் என போலித்தகவலை கசியவிட்ட அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு இன்று முற்பகல் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“ இருநாடுகளுக்குமிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் நோக்கிலேயே போலிக்கருத்து பரப்பட்டுள்ளது. இது அமைச்சரவைக் கூட்டுப்பொறுப்பை மீறும் செயலாகும். எனவே, தகவலை கசியவிட்டவர்களை கண்டறிய நிச்சயம் விசாரணை நடத்தப்படவேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் நரேந்திர மோடியும் பேச்சு நடத்திய பின்னர் உண்மை நிலைமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதேவேளை, அமைச்சரவை கூட்டத்தின்போது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு பகுதியை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக பிரதமரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த செய்தியில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை. அமைச்சரவைக்கு பிரதமர் எந்த பத்திரத்தையும் சமர்ப்பித்திருக்கவில்லை.
ஆனால் இவ் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் துறைமுகத்தின் கிழக்கு பகுதி தொடர்பாக நான் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருந்தேன்.
அந்த பத்திரம் தொடர்பாகவே அமைச்சரவை கூட்டத்தின் போது கலந்துரையாடப்பட்டது” என்றும் கூறினார்.