தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் காலம் கடந்துவிட்டது! – இப்படிக் கூறுகின்றார் டக்ளஸ்

“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனதுஅரசியல் பலத்தைப் பயன்படுத்தவேண்டும் எனத் தொடர்ச்சியாக நாங்கள் கூறிவந்திருக்கிறோம். ஆனால், கூட்டமைப்பு அதனைச் செய்யவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான காலம் எப்போதோ முடிந்துவிட்டது.”

– இவ்வாறு கூறியுள்ளார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தையும் பேசித் தீர்க்கவேண்டிய காலம் இந்த அரசு ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னரான 6 மாதங்கள் அல்லது ஒரு வருடங்களாகும். அதற்குள் பேசவேண்டியதைப் பேசி செய்யவேண்டியதைச் செய்திருக்கவேண்டும்.

காரணம் அப்போது எதிரணியில் உள்ளவர்கள் முடங்கியிருந்தார்கள். இன்று அவ்வாறான நிலை இல்லை. தேர்தல் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், காணாமல்போனவர்கள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களைப் பேசினார்கள். ஆனால், ஒன்றும் பூரணமாக அல்லது திருப்திப்படும் வகையில் தீர்க்கப்படவில்லை.

குறிப்பாக அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனதுஅரசியல் பலத்தைக் காண்பித்திருக்கவேண்டும். அவர்களுக்கு அந்தஅரசியல் பலம் இருந்தது. ஆனாலும் அவர்கள் அதனைப் பயன்படுத்தவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்டதமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து இணைந்து அரசுடன் பேச்சு நடத்தவேண்டும். அரசியல் கைதிகளுக்காக அனுராதபுரம் நோக்கி நடந்து சென்ற மாணவர்களும் கூட இதனைச் சொல்லியுள்ளார்கள். அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கோரிக்கையை நாங்கள் சிறைச்சாலை வரை கொண்டு வந்திருக்கின்றோம். அதற்கு அப்பால் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றில் இந்த விடயத்தைத் தீர்க்கவேண்டும் என மாணவர்கள் கூறியுள்ளனர். ஆகவே, சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து அரசுடன் பேசுவதன் ஊடாகச் சிறந்த பயனைப் பெறலாம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப் புதங்கள் கட்சிக்குள்ளேயே இதுபற்றிப் பேசுவதாகத் தெரியவில்லை”- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *