ஓட்டோவில் யுவதி கடத்தல்! செம்மணியில் பரபரப்பு!! – கணவனைக் கைதுசெய்தது பொலிஸ்

யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த யுவதி கடத்தி செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் ஓட்டோவின் சாரதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும், இவர் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது சந்தேகநபரான ஓட்டோச் சாரதி, கைதடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்குத் தனது மனைவியை அழைத்து சென்றார் என்றும், தனது மனைவி மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆலயத்திற்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தபோது மனைவி இடைநடுவில் குழப்பம் ஏற்படுத்தியதாகவும், இதனால் கைகளை கட்டி அழைத்துச் சென்றதாகவும், தனது பிள்ளைகளின் ஆடைகளையே ஓட்டோவில் இருந்து தூக்கி எறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெல்லிப்பளை வைத்தியசாலைக்கே தனது மனைவியை அழைத்து சென்றதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, செம்மணி வீதிவழியாக ஆடியபாதம் வீதி வரை இந்த ஓட்டோ சென்றுள்ளது. இதன்போது பலரும் அந்த ஓட்டோவை நிறுத்துவதற்கு முயற்சித்தனர்.

எனினும், ஓட்டோ எந்த இடத்திலும் நிறுத்தப்படவில்லை. அதேசமயம் திருநெல்வேலியில் அமைந்துள்ள வீதி சமிஞ்ஞையிலும் அந்த ஓட்டோ நிறுத்தப்படவில்லை.

முன்னதாக யாழ்ப்பாணம் – செம்மணிப் பகுதியில் யுவதி ஒருவரை இன்று மதியம் அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றனர் எனச் செய்திகள் வெளியானதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *