நள்ளிரவுடன் காலாவதியாகின்றது கூட்டு ஒப்பந்தம்! – சம்பள உயர்வு கோரி இன்றும் போராட்டம்

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் உட்பட நலன்புரி விடயங்களை நிர்ணயிக்கின்ற கூட்டுஒப்பந்தம் இன்றுடன் (15) காலாவதியாகின்றது.
ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொள்வதற்குரிய பேச்சுகள் இம்முறை முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தாலும் அவை தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.

இந்நிலையில், நியாயமான சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட்ட கூட்டுஒப்பந்தமானது 2015 மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியானது. எனினும், 19 மாதங்கள் கடந்த நிலையிலேயே 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

தொழிலாளர்களின் சார்பில் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட சம்பள உயர்வுகோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் நிராகரித்து, சொற்ப அளவு சம்பள உயர்வையே வழங்கியது.

இந்நிலையில்தான் இம்முறையும் நியானமான சம்பளம் வேண்டும் என தொழிலாளர்கள் போராடிவருகின்றனர்.ஹட்டன், செனன் தோட்ட மக்களும் இன்று போராட்டத்தில் இறங்கினர்.

ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளமாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தொழிற்சங்கங்களையும், முதலாளிமார் சம்மேளனத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையாகச் சாடினர்.

ஹட்டன் நிருபர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *