கூட்டுஒப்பந்தப் பேச்சு தோல்வி – அடிக்க அடிக்கத்தான் அம்மி நகருமென தொண்டா வீறாப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டுஒப்பந்தம் தொடர்பான பேச்சு இன்றும் ( 15) தோல்வியில் முடிவடைந்துள்ளது.
தொழிலாளர்களின் சார்பில் தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முதலாளிமார் சம்மேளனத்தால் நிராகரிக்கப்பட்டதையடுத்தே இணக்கப்பாடு எதுவுமின்றி பேச்சு நிறைவடைந்தது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், பிரதித் தலைவர் முத்துசிவலிங்கம், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், நிர்வாகச் செயலாளர் தீபா வேலாயுதம் உள்ளிட்டவர்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஆறுமுகன் தொண்டமான் எம்.பி.,
“ அடிக்க,அடிக்கதான் அம்மியும் நகரும். எனவே, தொழிலாளர்களின் சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தும்வரை நாம் ஓயமாட்டோம். தீபாவளிக்கு முன்னர் சம்பள உயர்வை மேற்கொள்வதற்கு எம்மால் முன்னெடுக்கப்பட்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை. இதுகவலையளிக்கின்றது” என்றார் தொண்டமான்.
2016 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டுஒப்பந்தம் இன்றுடன் காலாவதியாகின்றது. அதைபுதுப்பிப்பதற்குரிய பேச்சு இம்முறை முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தாலும் அது பயனளிக்கும் வகையில் அமையவில்லை.