மைத்திரி – மஹிந்த சந்திப்பு: நடந்தது என்ன? – கசிந்தன உள்வீட்டுத் தகவல்கள்

“அரசியலில் மாற்றங்கள் நடந்தன.. பல விடயங்கள் நடந்தேறின.. அவை ஒருபக்கம் இருக்கட்டும்… ஆனால், இப்போது இந்த நிமிடத்தில் நீங்கள்தான் நாட்டின் ஜனாதிபதி… அதனை நாங்கள் மதிக்கிறோம்… உங்களின் உயிருக்கு குறிவைக்கப்பட்டுள்ளது.. அது மிகவும் பாரதூரமானது… ஆனால், அது பற்றி பிரதமரோ அல்லது பொலிஸ்மா அதிபரோ மௌனம் காத்து வருகின்றனர்… எங்களையும் பழிவாங்கி பலவீனப்படுத்தி உங்களையும் – சுதந்திரக் கட்சியையும் அழிக்க அவர்களுக்கு இடமளிக்க போகின்றீர்களா?”

– இப்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது அவரிடம் நேரடியாகவே சொன்னார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்மார் பலரின் தீவிர முயற்சியால் இந்த சந்திப்பு அமைச்சர் எஸ் பி யின் பத்தரமுல்ல இல்லத்தில் நடைபெற்றது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இந்த சந்திப்பில் மஹிந்தவுடன் அவரது சகோதரர்கள் பஸில் ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் இருந்தனர்.

சில எம்பிக்கள் அங்கு இருந்தாலும் அவர்கள் வேறு ஓரு அறையில் இருந்தனர். இரவு உணவு வெளியில் இருந்து தருவிக்கப்பட்டது.. “கோப்பியா தேநீரா என்று எஸ்.பி. ஆரம்பத்தில் கேட்டதும் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது..” (இறுதியாக அப்பம் சாப்பிட்டு கோப்பி அருந்திய பின்னரே மைத்திரி மஹிந்தவை விட்டு வெளியேறினார்)… எல்லோரும் ஆளை ஆள் பார்த்துவிட்டு “க்ரீன் ரீ” குடிப்போமே என்றனர்… தேநீர் தயாரானது…

அதன் பின்னரே பேச்சு ஆரம்பமானது…

ராஜபக்ஷக்கள் மீதான அரசியல் பழிவாங்கல் குறித்தும் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கைது குறித்தும் மஹிந்த விபரிக்கத் தொடங்கினார்.

“மக்கள் சக்தி எங்களிடம் இருப்பதைப் பார்த்து பிரதமர் பயப்படுகின்றார். எங்களை முடக்க சதி நடக்கின்றது. அதன் ஒரு அங்கம் தான் இந்த கைதுகள் எல்லாம்… எவ்வளவு குற்றச்சாட்டுக்கள்… பழிகள் … ஏதாவது இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளதா? ஆக அரசியல் காரணமாக எல்லாம் நடக்கின்றது…” என்று சொன்ன மஹிந்த தனது விளக்கத்தை தொடர்ந்தார்.

“பொருளாதாரத்தைப் பாருங்கள்… சீரழிந்து போய் உள்ளது.. டொலர் ஏற்றத்தை தடுக்க சிறந்த முகாமைத்துவம் இல்லை…..தேர்தல் ஒன்றுக்கு சென்று பாருங்கள் மக்கள் பதில் சொல்லுவார்கள்… நாட்டு நிலைமையை சீராக்க எங்களை உதவும்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நமது ஆட்கள் என்னிடம் கேட்கின்றனர். நாட்டை சீரழித்த ரணிலின் ஆட்சி தொடர உதவ முடியாது. அப்படி எங்களின் ஆதரவு தேவையானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசில் இருந்து விலக வேண்டும்..ஐக்கிய தேசியக் கட்சியுடன் அவர்கள் தொடர்ந்தும் இருக்க முடியாது…” என்று கூறியபடி பஸிலின் பக்கம் திரும்பினார் மஹிந்த… பஸில் தொடர்ந்தார்…

“அப்படி நினைத்தபடி அரசுக்கு ஆதரவளிக்க முடியாது.. நாங்கள் எங்களது கட்சியின் கீழ்மட்ட தொண்டன் வரை இதுபற்றி நாங்கள் பேச வேண்டும். அவர்களின் கருத்துக்களைக் கேட்க வேண்டும். இன்றும்கூட உங்களை மதிக்கும் வகையில்தான் நாங்கள் வந்தோம். எங்களது அரசியல்வாதிகளை தொண்டர்களை வீதியில் நிறுத்த முயற்சித்த ரணிலின் இந்த அரசை எந்த முகத்தைக் கொண்டு நாங்கள் ஆதரிப்பது? எங்கள் உறுப்பினர்கள் எமக்கு ஆதரவளித்த மக்கள் என்ன சொல்கிறார்களோ அதனையே நாங்கள் செய்வோம்…” என்று இதுவரை வைத்திருந்த அதிருப்தி எல்லாவற்றையும் தனக்கே உரிய பாணியில் எடுத்து தன் பங்குக்கு பொரிந்து தள்ளினார் பஸில் ..

அதன்போது குறுக்கிட்ட மஹிந்த..

“நாங்கள் இப்போதுள்ள நிலைமையில் கட்சியுடன் பேசாமல் எதனையும் செய்ய முடியாது.. அதற்கு முன்னர் உண்மையில் சுதந்திரக் கட்சி இந்த அரசில் இருந்து வெளியேற வேண்டும் … சுதந்திரக் கட்சி அரசில் இருந்து வெளியேற வேண்டுமென ஒரு தீர்மானம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி நிறைவேற்றப்படவுள்ளதாக அறிந்தேன்.. அப்படி நிறைவேறினால் அதன் பின்னர் நீங்கள் ஒரு முடிவை எடுங்கள்… பின்னர் யோசிக்கலாம்” என்றார்…

எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரி, நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது தனக்கு கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்…

இதன்போது , ஜனாதிபதிக்கு எதிராக செய்யப்பட்ட சதி தொடர்பில் குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஷ அதன் பாரதூரத்தன்மையை விளக்கினார்… அதை மஹிந்த விபரமாக மைத்திரியிடம் எடுத்துரைத்தார்…

“ஜனாதிபதி ஒருவருக்கு எதிரான சதி என்பது இலேசான விடயமல்ல.. அது தேசத்துரோகத்துக்கு ஒப்பானது… ஆனால், உடனே இதுபற்றி பிரதமரோ, பொலிஸ்மா அதிபரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… இதுவரை இல்லை.. நாங்கள் உங்களுடன் அரசியல் ரீதியாக எதிர் என்றாலும் இப்படியாக அற்பமாக நாங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை… உங்களுக்கு ஒரு அனர்த்தம் நடந்தால் அடுத்து அரசியல் எப்படியாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள்… கோட்டாபயவும் அந்த அச்சுறுத்தலில் சிக்கியுள்ளார்…. பாதுகாப்பு அமைச்சரான நீங்கள் இதில் அமைதியாக இருந்தால் மக்கள்கூட இது ஏதோ சாதாரண விடயம் என்று நினைப்பார்கள்… நீங்கள் இதன் உண்மைத்தன்மையை கண்டறியுங்கள்…” என்றார் மஹிந்த

“ஆமாம் நானும் நடப்பவற்றை கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றேன்… கோட்டபாயவின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு பாதுகாப்பு செயலரை பணித்துள்ளேன்” என்றார் மைத்திரி …

“கூட்டு எதிர்க்கட்சியின் விசேட கூட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது… இடைக்கால அரசு ஒன்றுக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பதை பற்றி அதில் பேசுவோம்…” என்று மஹிந்த கூறிய கையோடு பேச்சும் முடிவுக்கு வந்தது…

அனைவரும் உணவை ஒன்றாக அருந்தினர்… பின்னர் ஜனாதிபதி மைத்திரி முதலில் வெளியேறினார்…

பின்னர் அங்கிருந்த எம் பிக்களுடன் சற்று அளவளாவிய பின்னர் மஹிந்தவும் அங்கிருந்து புறப்பட்டார்…

இந்த சந்திப்புக்கள் முடிந்த பின்னர் மஹிந்தவும் பஸிலும் பிறிதொரு இடத்தில் தனியே சந்தித்து நீண்ட மந்திராலோசனை நடத்தினர்… இனிவரும் காலங்களில் இந்த விடயங்களை பஸில் ராஜபக்ஷவே கையாள இங்கு தீர்மானிக்கப்பட்டது…

கூட்டு எதிர்க்கட்சியின் தீர்மானிக்கும் சக்தி – வாக்கு மெஷின் பஸில் என்பதால் அவரின் ஆலோசனையின்படியே அடுத்தகட்ட நகர்வுகள் போகப் போகின்றன…

தனி ஒரு ஆளாக மஹிந்த வளர்த்த தாமரை மொட்டு கட்சி இன்று மக்கள் பலத்துடன் எழும்பி, நாட்டின் ஜனாதிபதியையே அவர்களிடம் வர வைத்துள்ள நிலைமையில் அவரின் அடுத்த நகர்வும் அதிரடியாகத்தான் இருக்கப் போகின்றது. அதில் சந்தேகமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *