முள்ளிவாய்க்காலில் பெற்ற தாயையும் ஒற்றைக் கையையும் இழந்தும் மனவுறுதியுடன் சாதனை படைத்த மாணவி!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், இறுதிப் போரில் தாயையும் தன் ஒற்றைக் கையையும் இழந்த மாணவி ஒருவர் 169 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.
யுத்த பூமியில் இருந்து அங்கத்தையும் உறவையும் இழந்தாலும் மனவுறுதி தளராமல் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளார்.
முல்லைத்தீவு, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவியான ஞானசீலன் ராகினி என்ற மாணவியே 169 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிப் போரின்போது இடம்பெற்ற ஷெல் தாக்குதலில் குறித்த மாணவியின் தாய் உயிரிழந்துள்ளதுடன், மாணவி ஒரு கையை இழந்துள்ளார்.
தற்போது தந்தை மற்றும் சகோதரி ஒருவருடன் வசித்து வரும் குறித்த மாணவி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தனது திறமையை வௌிப்படுத்தியுள்ளார்.
குறித்த மாணவி, முள்ளிவாய்க்காலில் தாய் கொல்லப்பட்ட போது, இறந்த தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தாயையும் தன் ஒற்றைக் கையையும் இழந்தபோதும் மீண்டெழுந்த நட்சத்திரம் இவர்.