EastLocal

ஒலுவில் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு: ஹக்கீம் – சமரசிங்க தலைமையில் ஆராய்வு

ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பால் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை ஆகியவற்றுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பையேற்று, துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஒலுவிலில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.

ஒலுவில் துறைமுகக் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாணும் நோக்கிலான திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், பாதிக்கப்பட்டவர்கள் சார்பான கருத்துகளையும் தீர்வுத் திட்டங்கள் குறித்தும் இதன்போது விளக்கமளித்தார்.

கடலரிப்பால் அழிந்துபோகும் நிலங்களை மீட்பதற்கு, கடல் மண்ணை அகழ்ந்து கடற்கரையை மூடும் இயந்திரமொன்றைக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், டெடிடா நிறுவனம் 50 சதவீத நிதியை வழங்க முன்வந்துள்ளது. எஞ்சியுள்ள 50 சதவீதப் பணத்தை, அரசாங்கம் சார்பில் பெற்று, குறித்த இயந்திரத்தை 4 மாதங்களுக்குள் கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், துறைமுக அதிகாரசபையால் சுவீகரிக்கப்பட்டுள்ள அல்ஜாயிஸா பாடசாலை மைதானத்தை உடனடியாக விடுவிக்குமாறு, அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதன்போது உத்தரவிட்டார்.

மேலும், தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அரபா நகர் துறைமுக வீட்டுத்திட்ட காணிகளை உடனடியாக இரத்துச் செய்து, அவற்றைப் பொதுத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதற்கு வழங்குமாறும், இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டது.

இதேவேளை, ஒலுவில் துறைமுகம் ஒருபோதும் மூடப்பட மாட்டாது என்றும், இதனை அபிவிருத்தி செய்து, நாட்டுக்கு வருமானம் ஈட்டக் கூடியதாக மாற்றியமைப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஒலுவில் துறைகத்தை அண்டியுள்ள பகுதியில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்கி, வருமானம் ஈட்டக்கூடிய துறைமுகமாக ஒலுவில் துறைமுகம் மாற்றியமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading