‘நான் குடும்ப குத்துவிளக்கு’ – ஆடை குறைப்பு அசிங்கம் அல்ல – சன்னி லியோன்

கிளுகிளுப்பு, வெறுப்பு, சர்ச்சை, சாபம்… எல்லாம் சேர்ந்த பெயர்தான் சன்னி லியோன். சென்ற ஆண்டு  கூகுளில் இந்தியர்கள் அதிகம் தேடிய பெயர் இவருடையதுதான். சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தேன்.

“ஆடையைக் குறைப்பது மூலமா ஒரு பெண்ணோட மதிப்பு என்னைக்குமே குறைஞ்சுடாது. எல்லாமே பார்க்கிறவங்களோட கண்ணோட்டத்துல தான் இருக்கு. பாலியல் தொழில் செய்றவங்களுக்கும், போர்ன்- ஸ்டார்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஒரு பெண்ணை வற்புறுத்தி பாலியல் தொழிலுக்கு இழுத்துட்டு வரலாம். ஆனா, போர்ன் இன்டஸ்ட்ரியில ஒரு பெண்ணை வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ முடியாது!” – உறுதியாகச் சொல்கிறார் சன்னி லியோன்.

“நான் பாரம்பர்யம் மிக்க பஞ்சாபிக் குடும்பத்துல பொறந்து வளர்ந்த பொண்ணு. என் ஒரிஜினல் பெயர், கரன்ஜித் கௌர். சின்ன வயசுல ரொம்ப அமைதியான பொண்ணாதான் என்னை எல்லோருக்கும் தெரியும். அதிகமா யார்கிட்டேயும் பேசமாட்டேன். ஆனா, ஆண் -பெண் வித்தியாசம் பார்க்காம ஹாக்கி விளையாடுவேன்.

ஒரு டாம்-பாய்க்கான அத்தனை குணங்களும் என்கிட்ட இருந்தது. அமெரிக்கன் பேஸ்கட் பால் பிளேயர் மைக்கேல் ஜோர்டனை எனக்கு ரொம்பப் பிடிக்கும். விளையாட்டுல எனக்கு அதிக ஆர்வம் இருந்தாலும், அதில் பணம் சம்பாதிக்கிறதுக்கான வழிகளைத் தேடலை.

வீட்டுல பணப் பிரச்னை இருந்ததனால மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். எனக்கு ஒரு மாடல் ஆகணும்ங்கிற ஆசை என்னைக்குமே இருந்ததில்லை. விளையாட்டுத்தனமா ஆரம்பிச்ச இந்தத் தொழிலுக்கு, நாளைடைவுல நான் அடிமை ஆயிட்டேன். ஏன்னா, எந்தவொரு வேலையிலேயும் கிடைக்காத சம்பளம் மாடலிங்ல எனக்குக் கிடைச்சது.

வீட்டுக்குப் பணம் கொடுக்க ஆரம்பிச்சேன். அப்பா, அம்மா ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. என் தம்பி சந்தீப்தான் எனக்குப் பக்கபலம். ‘Penthouse – Pet of the Year 2003’ டைட்டிலை ஜெயிச்சேன். ‘பென்ட் ஹவுஸ்’ங்கிறது ஒரு எராட்டிக் மேகஸின் (Erotic Magazine). அந்த இதழில் அரை குறை ஆடைகளோட அட்டைப் படத்துக்குப் போஸ் கொடுத்ததுல இருந்துதான் வீட்டுல பிரச்னை ஆரம்பிச்சது. எந்த இந்தியக் குடும்பத்துலதான் தன் பொண்ணு இந்தமாதிரி பண்றதை விரும்புவாங்க?

குடும்பத்துல அவமானப்பட்ட சமயத்துல இருந்து தன்னிச்சையா செயல்பட ஆரம்பிச்சேன். இதுவரை என்னை யாரும் இந்தத் துறையில எதுக்காகவும் வற்புறுத்தியது கிடையாது. அமெரிக்காவுல மாடலிங் பண்றதோட மிக முக்கியமான வசதி இதுதான். விருப்பப்பட்டா இந்தத் துறையில இருக்கலாம். இல்லைனா, உங்களோட இடத்தை நிரப்ப பலபேர் வரிசையில இருப்பாங்க. இதுக்கிடையில ஒரு செமி-போர்ன் (Semi- Porn) மூவியிலேயும் நடிச்சிருந்தேன். இதெல்லாம் என் 16 வயசுலேயே நடந்து முடிஞ்சிடுச்சு.”

 

“இந்தத் துறையில நீங்க பட்ட கஷ்டங்கள், கத்துக்கிட்ட பாடங்கள் என்னென்ன?”

“என்ன வேலை செஞ்சாலும், அதுல கஷ்டம் இருக்கும். நான் அதைப் பெருசா கண்டுக்கிறது கிடையாது. நம்மளைச் சுத்தி இருக்கிறவங்க பின்னாடி எப்படிப் பேசுவாங்க, முன்னாடி எப்படி நடந்துக்குவாங்கனு புரிஞ்சுகிட்டேன். அதிகமா சம்பாதிக்கிறேன். அதைச் சமூக சேவைக்கும் பயன்படுத்துறேன். எல்லோரும் எனக்கு இருக்கிற கெட்ட பெயரை மறைக்கத்தான், இந்த மாதிரியான சமூக சேவைகளைச் செய்றேன்னு நினைச்சுக்கிட்டிருக்காங்க. உண்மையிலேயே சின்ன வயசுல இருந்து நர்ஸ் ஆகி, பல சேவைகள் பண்ணணும்னு நினைச்சவ நான்.”

“நீங்க பல்வேறு கலாசாரங்களுக்கு உட்பட்டு வளர்ந்த பொண்ணு. கலாசாரம், பாரம்பர்யம், சமூக நெறிமுறை… இவை குறித்த உங்க பார்வை என்ன?”

“அப்பா திபெத்ல பிறந்து, டெல்லியில வளர்ந்தவர். அம்மா இமாச்சல் பிரதேசத்துல பிறந்து வளர்ந்தவங்க. நான் கனடாவுல பிறந்து, அமெரிக்காவுல வளர்ந்தேன். ஆனா, எங்களோட பூர்வீகம் பஞ்சாப். சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவங்க நாங்க. வீட்டுல பஞ்சாபி, இந்தி மற்றும் ஆங்கிலம் பேசுவோம். இப்படிப்பட்ட ஒரு குடும்பத்துல வளர்ந்ததுனால, பல்வேறு கலாசாரப் புரிதல் எனக்கு இருக்கு. சில சடங்குகள் ஏன் பண்றாங்க, எதுக்குப் பண்றாங்கனு தெரியாது. இருந்தாலும், சமூக நெறிமுறைகள், கட்டுப்பாடுகளை நான் மதிக்கிறேன். வாழ்க்கைக்குப் பாரம்பர்யம், கலாசாரம் எல்லாமே முக்கியம். ஆனா, அதைக் கடந்து வாழ்றவங்களை தவறா பார்க்காதீங்க!”

“கணவர் டேனியல் மற்றும் தத்தெடுத்து வளர்க்கிற குழந்தைகள் பற்றி?” 

“நாங்க நிஷாவைத் தேர்ந்தெடுக்கலை; நிஷாதான் எங்களைத் தேர்ந்தெடுத்தாள். அவள் கடவுளோட குழந்தை. அவளைத் தத்தெடுத்து வளர்க்கிறோம். அவளுக்கு இப்போ நோவா, ஆஷர்னு ரெண்டு தம்பிகள் இருக்காங்க. இவங்க ரெண்டுபேரும் வாடகைத் தாய் மூலமா பிறந்தவங்க. நிஷா இப்போதான் பேச ஆரம்பிச்சிருக்காங்க. ரெண்டு பசங்களும் இப்போதான் தவழ ஆரம்பிச்சிருக்காங்க. மூணு பேரும் சேர்ந்து விளையாட ஆரம்பிச்சிருக்காங்க. நிஷா, ரெண்டு தம்பிகளையும் நல்லா பார்த்துக்கிறா. ஷூட்டிங் நேரங்கள்ல பசங்களைப் பார்த்துக்கிறதுக்குத் தனியா ஆள் இருக்காங்க. சாப்பாடு செஞ்சு கொடுக்கிறதுல ஆரம்பிச்சு, அவங்ககூட விளையாடுறது வரை எல்லாமே அவங்க பொறுப்பு. எங்க அம்மா தவறிட்டாங்க. அவங்க இருந்தா, இப்போ இந்த வேலைகளையெல்லாம் அவங்களே பார்த்துக்கிட்டு இருந்திருப்பாங்க.”

“தமிழ்ப்படங்கள் பார்ப்பீங்களா?”

“நிறைய தமிழ்ப்படங்களைப் பார்த்திருக்கேன். ரஜினியை ரொம்பப் பிடிக்கும். கடைசியா பார்த்த படம், ‘பாகுபலி.’ இப்போ நான் நடிக்கிற ‘வீரமாதேவி’ ஷூட்டிங் ஆரம்பிக்கப்போகுது. கூடிய சீக்கிரம் நிறைய தமிழ்ப்படங்கள்ல என்னைப் பார்க்கலாம்!”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *