விவசாயிகளின் பிரச்சினையை முழுமையாக அலசாத படம் பூமி!

ஜெயம் ரவியின் 25 வது படம். விவசாயம் காக்கப்பட வேண்டும், விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்பட வேண்டும் என்கிற நல்ல கருத்தைச் சொல்ல வந்த படம் பூமி. ஆனால், அதை சரியாகச் சொல்லி இருக்கிறதா?

நாசாவின் நிதி உதவியில் படித்து அங்கேயே வேலைக்குச் சேர்கிறார், தமிழகக் கிராமம் ஒன்றில் பிறந்த பூமிநாதன் என்கிற பூமி. செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் முக்கிய விஞ்ஞானியாக இருக்கும் அவர், கிடைக்கும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகிறார்.

ஊரில் விவசாயிகள் தண்ணீர் இன்றியும் கடன் சுமையாலும் தவிக்கிறார்கள். ஏன் இப்படி என்று களமிறங்கும் பூமி, மரபணு மாற்றப்பட்ட விதைகளால் இந்த மண்ணை சிதைக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தை எதிர்க்கிறார். அந்தக் கார்ப்பரேட் முதலாளியே நேரடியாக அவருடன் மோத, பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படம்.

சமீபகாலமாக, தமிழ் சினிமா இயக்குனர்களின் கவனம் விவசாயிகளின் மீதும் விவசாயத்தின் மீதும் திரும்பி இருப்பது வரவேற்கக் கூடியதுதான்.

கார்பரேட்டை எதிர்க்கும் பல படங்களை ஏற்கனவே பார்த்திருப்பதால், அடுத்து என்ன நடக்கும் என்பதை பூமி படத்தில் எளிதாக யூகித்துவிட முடிகிறது.

நாசா விஞ்ஞானியாகவும் விவசாயியாகவும் கம்பீரமாக வருகிறார் ஜெயம் ரவி. அடிக்கடி ஆவேசம் கொள்ளும் அவர், எமோஷனலாகி, மண்ணை அள்ளி நெஞ்சில் பூசிக் கொள்கிறார்.

விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்யும்போது தவிப்பது, “குடும்ப பிரச்சனையில தற்கொலை செய்து கொண்டார்” என்று பொய் சொல்லும் அரசியல்வாதியை கண்டு கொதிப்பது, கார்ப்பரேட் முதலாளியிடம் சவால் விடுவது என அவர் நடிப்பில் அத்தனை முதிர்ச்சி.

ஹீரோயின் நிதி அகர்வாலுக்கு அதிக வேலை இல்லை. கார்ப்பரேட் முதலாளியாக வரும் வில்லன் ரோனித் ராய் தனது வேலையை கச்சிதமாகச் செய்துவிட்டு போகிறார். பொய் அரசியல்வாதி ராதாரவி, மோசமான கலெக்டர் ஜான் விஜய், வட்டாட்சியர் மாரிமுத்து, சில காட்சிகளில் தலைகாட்டும் நண்பன் சதீஷ் என படத்தில் வரும் கேரக்டர்கள் இயக்குனர் சொன்னதை செய்துவிட்டு போகிறார்கள்.

இந்த உலகத்தையே 13 குடும்பங்கள்தான் ஆளுது தெரியுமா? ஒரு கார் தயாரிக்க ஐந்து லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுது என்பது போன்ற, நம்பகத்தன்மை இல்லாத வாட்ஸப் தகவல்கள், வசனங்களாக படம் முழுவதும் காணப்படுகிறது. இமான் இசையில், தமிழன் என்று சொல்லடா கவனிக்க வைக்கிறது. டட்லியின் ஒளிப்பதிவு கதையை நகர்த்த அழகாக உதவி இருக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் நாடகத்தனத்தின் உச்சம். செயற்கையான அந்தக் காட்சிகளால் படத்தோடு ஒன்ற முடியவில்லை. சொல்ல வந்த விஷயத்துக்காக இயக்குனரை பாராட்டலாம் என்றால் அதை அழுத்தமாகச் சொல்லவில்லை என்பதற்காக, அந்தப் பாராட்டைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *