பிராந்திய அலுவலகங்களை அமைக்கும் பணியில் இறங்கியது காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம்!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகம், வடக்கு மாகாணத்தில் பிராந்திய அலுவலகங்களை அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கான ஆரம்பகட்டப் பணிகள் அடுத்த மாதம் இறுதியில் ஆரம்பமாகவுள்ளன என்று அறியமுடிகின்றது.

“இவ்வருட இறுதிக்குள் இரண்டு அலுவலகங்களை அமைப்பதற்கு எதிர்பார்த்திருக்கின்றோம்” என்று பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார் என்று ‘காலைக்கதிர்’ பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தைக் கையாள்வதற்காகப் பணியகமொன்றை நல்லாட்சி அரசு நிறுவியது.

வடக்கு, கிழக்கு, தெற்கு என நாட்டின் பல பகுதிகளுக்கும் கள விஜயம் மேற்கொண்டிருந்த பணியகத்தின் உறுப்பினர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து சாட்சியங்களையும் பதிவு செய்தனர்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு பரிந்துரை அறிக்கையொன்றை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரிடம் பணியகத்தினர் அண்மையில் கையளித்தனர். மேற்படி பணியகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பணியகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவென்று வினவியபோதே, பிராந்திய அலுவலகங்கள் இரண்டை இவ்வருட இறுதிக்குள் அமைக்கவிருக்கும் தகவலை வெளியிட்டார்.

“அரசிடம் நாம் பரிந்துரை அறிக்கையை முன்வைத்தோம். அவை நடைமுறைப்படுத்தப்படவேண்டும். சிபாரிசுகளை அமுல்படுத்தும்போது உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அதை வழங்குவோம்” என்றும் கூறினார்.

எட்டு பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்குப் பணியகம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *