நவீன தொழில்நுட்பத்தால் அழிந்து வரும் பத்திரிகை விற்பனை!

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் மல்லாக்க படுத்துக்கொண்டு வாசிப்பதில் இருக்கும் சுகம் எதிலும் இல்லை. தொழில்நுட்பத்துடன் ஒட்டி உறவாடுவதில் இருக்கும் சுகத்தை விட பன்மடங்கு சுகம் வாசிப்பில் அதிகம் என்பதை மறுக்க முடியாது.

வாசிப்பு நெஞ்சுக்கு நெருக்கமானது. இப்படியான வாசிப்பு மறுவிக்கொண்டு வருகிறதென்றால் நம்ப முடிகிறதா?

தொலைக்காட்சி, வானொலி, முகப்புத்தகம் பரவலாகியதன் பின்னர் பத்திரிகைகள் நிறையவே வெளிவருவதை நிறுத்திக்கொண்டன.

சில பத்திரிகைகள் நிகழ்நிலைக்கு மாறிவிட்டன. இன்னும் சில பத்திரிகைகள் நட்டத்திலும், கடமைக்கும் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. அதிகாலையில் எல்லா பத்திரிகைகளையும் மேசையில் பரப்பி வைத்துக்கொண்டு முக்கால் மணிநேரத்தினுள் எல்லா பத்திரிகைகளிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அணில் கடி கடிக்கும் தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பாளர்களால் பத்திரிகை விநியோகம், வியாபாரம் கணிசமாகக் குறைந்துள்ளது. அதனால் பத்திரிகைகள் விற்பனையாவதில்லை. நூற்றுக்கணக்கில் விற்ற பத்திரிகைகள் இப்போது பத்துகூட விற்பனையாவதில்லை என்கின்றனர் பத்திரிகை விற்பனை முகவர்கள்.

இப்படியான சூழ்நிலையில் வாசிப்புப் பழக்கமானது தற்போதைய காலத்தில் மிக வேகமாக அருகி வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றபோதும் அவற்றில் எந்தவொரு காரணமும் ஆமோதித்து ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதன்று. ஏனெனில், வாசிப்பை தவிர்த்து ஒரு மனிதனின் வாழ்வு நிறைவுடையதாக அமைய முடியாது. வாசிப்பு என்றால் என்ன? என்ற வினாவுக்கு தேடல் மிகப் பரந்தது. வாசிப்பு என்பது ஒரு விஞ்ஞான ரீதியான செயற்பாட்டுக்கு ஈடானது. முக்கியத்துவமானது. அதனால்தான் ~வாசிப்பு ஒரு செயன்முறை|யாகக் கருதப்படுகின்றது.

வாசிப்பு என்பது எழுத்துகள், குறியீடுகளிலிருந்து கருத்தொன்றைப் பெற்றுக்கொள்வதற்கான சிக்கலான அறிவுசார்ந்த செயன்முறையாகும். இது மொழிப் பயன்பாட்டைப் போன்று தொடர்பாடலை மேற்கொள்ளவும், தகவல்களையும் எண்ணங்களையும் பரிமாறிக்கொள்ளவும் பயன்படுகின்ற, வாசகருக்கும் எழுத்துகளுக்கும் இடையிலான சிக்கலான ஒரு இடைத்தொடர்பாகும்.

இது வாசகரது முன்னறிவு, மொழியறிவு, அனுபவம், உளப்பாங்கு ஆகியவற்றால் சமூக, கலாசார நிலைமைகளுக்கேற்ப ஒழுங்குபடுத்தப்படுகிறது.

வாசிப்புச் செயன்முறையை வெற்றிகரமாக்குவதற்கு தொடர்ச்சியான பயிற்சி, அப்பயிற்சியில் விருத்தி புத்துருவாக்க சிந்தனை, ஆக்கத்திறன், சிக்கலான விடயங்களை பகுப்பாய்வுசெய்யும் திறன் என்பன அவசியமாகும். வாசிப்பு என்பதற்குக் கொடுக்கப்பட்ட மேற்படி வரைவிலக்கணத்திலிருந்தே வாசிப்பின் முக்கியத்துவத்தை எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றதல்லவா.

வாசிப்புப் பழக்கமானது தற்பொழுது மிக வேகமாக அருகி வருகின்றது. வாசிப்புப் பழக்கத்தைக் குறைப்பதில் அல்லது முற்று முழுதாக இல்லாதொழிப்பதில் இலத்திரனியல் ஊடகங்களும், இலத்திரனியல் சாதனங்களும் அளப்பரிய பங்கை ஆற்றிவருகின்றன என்பது மிக வருத்தத்திற்குரிய, மறுக்க முடியாத ஓர் உண்மையாகும்.

தற்போதைய காலகட்டத்தில் திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என ஒரு பக்கமாகவும் இலத்திரனியல் பத்திரிகைகள், இலத்திரனியல் சஞ்சிகைகள், இலத்திரனியல் புத்தகங்கள் என ஒரு பக்கமாகவும் இணையம், முகநூல், டுவிட்டர் என ஒரு பக்கமாகவும் மும்முனைத் தாக்குதலிலிருந்து தப்பித்து ஒரு மனிதன் வாசிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கின்றான். இலத்திரனியல் ஊடகங்களையோ அல்லது இலத்திரனியல் சாதனங்களையோ குறைத்து மதிப்பிடுவதோ, குறை காண்பதோ, பரிகாசம் செய்வதோ இக்கட்டுரையின் நோக்கம் அல்ல.

வாசிப்பு எனும்போது பெரும்பாலும் புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் சார்ந்த வாசிப்பே கருதப்படுகின்றது. மின்னல் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கும் உலகில் அன்றாட நிகழ்வுகள் தொடக்கம் ஆழமான ஆய்வுகள் வரை பலவகையான தகவல்களை அறிந்துகொள்வதற்கும், அறிவை இற்றைப்படுத்திக்கொள்வதற்கும், நல்ல பண்புகளை வளர்த்து உன்னதமான மனிதனாக மாறுவதற்குத் தேவையான உற்சாகத்தையும் ஊக்கத்தையும் பெற்றுக் கொள்வதற்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள் அளப்பரிய பங்களிப்பைச் செய்துவருகின்றன.

நல்ல நூல்கள் நம் கையிலிருந்தால் அவை எமக்கு அரவணைக்கும் தாயாக, தைரியமூட்டும் தந்தையாக, கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் நண்பனாக, சிறந்ததொரு வழிகாட்டியாக இருக்கும். எம்மில் மறைந்திருக்கும் ஆற்றல்களைக் கண்டுபிடிப்பதற்கும், தெளிவான சிறந்த அறிவைப் பெற்றுக்கொள்வதற்கும் வாசிப்புப் பழக்கம் மிக முக்கியமானது. கலைகளைப் படிப்பதும் ஒரு கலைதான். அக்கலைகள் அனைத்தையும் ஒருங்கே|கொண்ட கலைதான் வாசிப்புக்கலை என்கிறார் எழுத்தாளர் சித்திக் செயின்.

வாசிப்புத்திறன் மிக்க ஒருவர் பேச்சுத் திறன்மிக்கவராகவும், ஞாபகசக்திமிக்கவ ராகவும், விடயங்ளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல்மிக்கவராகவும், பொது அறிவு மிக்கவராகவும் விளங்குவார் என்பது ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. பிற்காலத்தில் அவன் அறிவாற்றல் மிக்கவராகவும், வாழ்வில் மேம்பட்டவராகவும் விளங்குவார் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. உலகமறிந்த சில உன்னத மனிதர்களின் வாழ்வில் நடந்த சில சம்பங்களைப் பார்ப்போமாக இருந்தால், வாசிப்புப் பழக்கமே அவர்கள் தங்கள் வாழ்வில் அவ்வாறான உன்னதமான நிலையை அடைந்து, உலக வரலாற்றின் சில பக்கங்களைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள உந்துசக்தியாக இருந்தது என்பது தெளிவாகும்.

உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே எழுச்சி என்ற கட்டடத்தை எழுப்பியுள்ளன. இங்கே அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பாகும். வாசிப்பு குறையும்போது அறிவு குறைகிறது. அறிவு குறையும்போது அழிவு நெருங்குகிறது என்பதே அர்த்தம். புராதன காலத்திலும் கூட வாசிப்பு அறிவுத் தேடலின் அடிப்படை வழியாகவே இருந்துவந்துள்ளது. எகிப்திய ஃபார்வோன்கள் தங்கள் கடவுள் ஆசீர்வாதத்துடன் உருவாக்கிய முதல் நூல் நிலையத்தில் ‘இங்கே ஆத்மாக்களுக்குரிய உணவும் சிந்தனைக்கு விருந்தும் உண்டு” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்தக் கூற்றே வாசிப்பின் முக்கியத்தின் எடுத்துக்காட்டாக இருக்கிறது.

‘அறிவு உயர்த்தப்படுவதும், அறியாமை நிலை பெறுவதும் யுக முடிவின் அடையாளங் களில் ஒன்றாகும்” என நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புஹாரி). இதிலிருந்து இந்த உலகமும் அறிவிலேயே நிலைத்திருக்கின்றது என்ற உண்மையை விளங்க முடிகின்றது.

வாழ்வும் சாவும் தங்கியிருப்பதே வாசிப்பில்தான் என்பதுதான் மேற்குறித்த ஹதீஸ் சுட்டிக்காட்டும் அர்த்தமாகும். இந்த உலகில் மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமான சமூக மாற்றத்தை தோற்றுவித்த இஸ்லாம் தனது தூதை ‘வாசிப்பீராக” என்றே துவங்கியது. காரணம், சமூக மேம்பாட்டின் ஆணிவேர் வாசிப்பாகும். அந்தவகையில்தான் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் வாழ்நாள் முழுவதும் கற்றல் எனும் தேடலை மனித வாழ்வின் இலக்காகக் குறிப்பிட்டார்கள். கற்றலுக்கு அடிப்படை வாசிப்பு. வாசிப்பு எல்லா விடயங்களிலும் வெற்றிக்கு வழிகோலும். வாசிப்பு அறிவின் வேராக இருந்தாலும் சமூக யதார்த்தத்தைப் பார்க்கும்போது கவலை தரும் வெளிப்பாடுகளையே காண முடிகிறது.

வாசிப்பின் அடிப்படையில் எமது மக்களை பல்வேறு வகையில் வகைப்படுத்தலாம்:

வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால், வாசிக்காதவர்கள்.  வாசிப்பு முக்கியம் என்ற உணர்வு இருந்தும் சோம்பல் அல்லது நேரமின்மை காரணமாக வாசிக்காதவர்கள். உண்மையில் இவர்கள் பெரும் நட்டத்தில் இருப்பவர்கள்.

வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால், வாசிப்பின் முக்கியத்துவம் தெரியாதவர்கள்.

எமது சமூகத்தின் கணிசமான பகுதி இப்பிரிவைச் சார்ந்தவர்களே. வாசிப்பின் முக்கியத்துவம் உணராமலேயே பட்டப் படிப்பையும் முடித்துவிட்டு பலதரப்பட்ட தொழில்களிலும் அமர்ந்து விடுபவர்கள். அறியாமையில் தூங்கும் இப்பிரிவினரை தட்டியெழுப்புவது எமக்கிருக்கும் தார்மீகக் கடமையாகும்.

வாசிக்கத் தெரிந்தவர்கள். வாசிப்பின் முக்கியத்துவமும் அறிந்தவர்கள்:  மிகக் குறைந்தளவு தொகையைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் இவர்களே. இவர்கள் உண்மையில் அருள் பாக்கியம் பெற்றவர்கள்.

வாசிக்கத் தெரிந்தவர்கள். ஆனால் வாசிப்பதற்கான வளங்களோ வசதிகளோ அற்றவர்கள்:

நூலகங்கள் கூட இவர்களின் அறிவுப் பசிக்குத் தீனி போடும் அமைப்பில் இல்லை என்பது கசப்பான உண்மை. எனவே, வளமான நூலகங்களை அமைத்துக்கொடுப்பதில் சமூக ஆர்வலர்கள் மிகுந்த கவனமெடுக்க வேண்டும்.

வாசிக்கத் தெரியாதவர்கள். ஆனால், வாசிப்பின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள்:

ஊர்களில் ஒருவர் வாசிக்க சுற்றியிருந்து கேட்கும் மக்கள் கூட்டம் எமக்கு உணர்த்துவது இதைத்தான். இயலாது என்று ஒன்றும் இல்ல. துணிந்தால் இவர்களும் நல்ல வாசகர்களாக மாறலாம். இப்படி பல்வேறு வகையானோர் இந்த உலகில் வாழ்கின்றனர்.

உலகமறிந்த சில உன்னத மனிதர்களின் வாழ்வில் நடந்த சில சம்பங்களைப் பார்ப்போ மாக இருந்தால், வாசிப்புப் பழக்கமே அவர்கள் தங்கள் வாழ்வில் அவ்வாறான உன்னதமான நிலையை அடைந்து, உலக வரலாற்றின் சில பக்கங்களைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொள்ள உந்துசக்தியாக இருந்ததென்பது தெளிவாகும். எமது அண்டைய நாடான இந்திய சுதந்திரத்துக்கு முக்கிய பங்காற்றிய மாவீரன் பகவத்சிங் தூக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பதாகக் கூடப் புத்தகம் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தாராம் என்பது வரலாறு.

மகாத்மா காந்தியிடம் ‘உங்களுக்கு ஒரு கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்டபோது ‘மிகச் சிறந்த நூலகம் ஒன்றை அமைப்பேன்” என்றாராம். ‘யாருமற்ற தனிமைத் தீவில் தள்ளிவிடப்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்று பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கேட்கப்பட்டபோது ‘புத்தகங்களுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்துவேன்” என்றாராம். நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த ஓர் அரசியல் பிரமுகர், ‘உங்களுக்கு என்ன சலுகைகள் சிறைச்சாலையில் வேண்டும்?” என்று கேட்டபோது ‘புத்தகங்கள் படிப்பதற்கு அனுமதித்தால் போதும்” என்றாராம். ‘மகாத்மா காந்தியின் சத்திய சோதனையைப் படித்த பின்புதான் கறுப்பின விடுதலைக்காக போராடும் எண்ணமே எனக்கு உதித்தது” என்ற நெல்சன் மண்டேலாவின் கூற்றும் இங்கு கவனிக்கத்தக்க ஒன்றே.

‘மனிதனது கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு எது?” என்று ஐன்ஸ்டீனிடம் கேட்கப்பட்ட பொழுது ‘புத்தகங்கள்தான்” என்றாராம். இப்படி வாசிப்பின் முக்கியத்துவத்தைக் கூறும் விடயங்கள் நீண்டுகொண்டே செல்லும். இப்பட்டியல்கள் தருகின்ற பாடங்களை உற்று நோக்கினால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தாம் பிறந்ததற்கான நன்றிக்கடனை தமது நாட்டுக்கோ, தமது இனத்துக்கோ அல்லது உலகத்துக்கோ அதியுச்ச அளவில் திருப்பிச் செலுத்தி இவ்வுலக வரலாற்றில் இடம்பிடித்தவர்கள். அவ்வாறானவர்கள் வாசிப்புத் தொடர்பாகக் கொண்டிருந்த சிந்தனைகள் வாசிப்பின் முக்கியத்துவத்தை எமக்கு எடுத்தியம்புகிறது.

வாசிப்பதால் ஒரு மனிதன் பூரணமடை கின்றான். ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது உலகின் ஒரு ஜன்னலைத் திறக்கிறோம் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். புத்தகம் என்பது பையில் சுமந்து செல்லும் ஒரு பூந்தோட்டம் என்கிறது ஒரு சீனப் பழமொழி. புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக்கின்றோம்.

அதை மீண்டும் மீண்டும் வாசிக்கும்போது நீண்டகால நண்பனைச் சந்திக்கின்றோம் என்கிறது மற்றுமொரு சீனப் பழமொழி. ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள். அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள் எனும் அரேபியப் பழமொழி போன்ற உலகப் பழமொழிகள் பலவும் வாசிப்பின் முக்கியத்துவத்தை சுட்டி நிற்பதை அவதானிக்க முடிகிறது.

இவ்வாசிப்பின் முக்கியத்துவம் இலங்கை அரசாலும் உணரப்பட்டு, வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பரந்தளவில் எமது நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுவாக முக்கியமான நிகழ்வுகள் ஒரு நாள் மாத்திரமே கொண்டாடப்படுவது வழமையானது. ஆனால், வாசிப்பின் முக்கியத்துவம் கருதி ஒக்டோபர் மாதம் முழுவதும் வாசிப்பு மாதமாக இலங்கையில் பிரகடனம் செய்யப்பட்டிருப்பது வாசிப்பின் முக்கியத்துவத்துக்கு சிறந்த சான்றாகும்.

ஒரு குழந்தை பேசக் கற்றுக்கொள்ளும் போதே வாசிக்கவும் பழக்குதல் வேண்டும். ஆரம்பத்தில் படங்கள் மட்டும் கொண்ட புத்தகங்களை வழங்குதல், பிள்ளை எழுத்துகளைத் தெரிந்துகொண்ட பின்னர் படங்களையும் பெயர்களையும் கொண்ட புத்தகங்களை அறிமுகம் செய்தல், சித்திரக் கதைப் புத்தகங்களை அறிமுகம் செய்தல், சிறிய புத்தகங்களை அறிமுகம் செய்தல் என்றவாறாக இச்செயன்முறை விருத்தி செய்யப்பட வேண்டும்.

இச்செயன்முறை மூலம் வாசிப்புப் பழக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே ஆரம்பித்து, பின்னர் படிப்படியாக அதிகரிக்கச்செய்து, வாசிப்புப் பழக்கம் மிக்க சமுதாயமொன்றை உருவாக்கு வதன் மூலம் ஒரு சமுதாயத்தையே நல்வழிப் படுத்தலாம். வாசித்தல் குறைபாடுடைய மாணவன் அனேகமாக கற்றலில் பின்தங்கியிருப்பதைக் காணலாம். பிள்ளை வயதிலும், அறிவிலும் முதிர்ச்சியடையும்போது வாசித்தலின் முக்கியத்துவம் மேலும் உணரப்படும். அறிவைப் பெற்றுக்கொள்ளும் ஒரேயொரு வழி வாசித்தல் என்று கூறுமளவுக்கு உயர் கல்வியில் வாசிப்பின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

அறிவைப் பெற பாடநூல்கள், பத்திரிகைகள் இருந்தால் மட்டும் பயன் கிடைப்பதில்லை. அறிவைத்தேடி அணுகும் வாயிலாக வாசிப்பை நாம் பயிற்ற வேண்டும். தற்காலத்தில் அறிவை அடைந்துகொள்வதற்கான சாதனம் வாசிப்பு என்பதால் சிறுபராயத்திலிருந்தே வாசிப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். மாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கப் பொருத்தமான சூழ்நிலையை வகுப்பறையில் உண்டாக்குவது ஆசிரியருக்குரிய கடமையாகும். மாணவர்கள் விரும்பக்கூடிய முறையில் வாசிப்பை ஆரம்பித்து நீண்டகாலம் நிலைபெறக்கூடிய வாசிப்பில் ஆர்வத்தை அவர்களிடம் உண்டாக்குவது இன்றியமையாது.

மாணவர்களின் முதிர்ச்சிக்கும் விருப்பத்துக்கும் உரிய முறையில் வாசித்தல் செயற்பாடொன்றை அமைத்துக்கொள்வது ஆசிரியர்களுக்குரிய செயலென்பது இதனால் தெளிவாகிறது. வகுப்பறையில் சிறந்த வாசிப்புச் சூழலொன்றை அமைப்பதால் குறைபாடுகள் நிரம்பிய சூழலில் வாசிக்கும் பிள்ளைக்கும் வாசிப்பில் ஆர்வத்தை உண்டாக்கலாம். வகுப்பறையில் உபயோகிக்கப்படும் படங்கள், வாசிப்புத் தாள்கள், மாதிரி உருவங்கள் ஆகியவற்றைக் கொண்டும் அவற்றை வைத்துத் தயாரிக்கப்படும் பல விளையாட்டுச் செயன்முறைகளாலும் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கலாம்.

உறவினர் வீடுகளுக்குச் செல்லும்போது பிஸ்கட் பெட்டிகளைக்கொண்டு செல்வதற்குப் பதிலாக புத்தகங்களைக் கொண்டுசெல்லும் பழக்கம் எம்மிடையே ஏற்படவேண்டும். பிறந்தநாள் பரிசாகவும் நினைவுப் பரிசாகவும் புத்தகங்களை வழங்குகின்ற ஒரு சமுதாயம் எம்மிடையே தலைதூக்க வேண்டும். அப்போதுதான் மனிதனின் அறிவுத் தேடல் நிறைவுசெய்யப்பட்டு, எமது சிறார்களும், இளைஞர், யுவதிகளும் தவறான வழியில் செல்வதிலிருந்து தடுத்துநிறுத்த முடியும். நல்ல நூல்கள் நம் கையிலிருந்தால் அவை எமக்கு அரவணைக்கும் தாயாக, தைரியமூட்டும் தந்தையாக, கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளும் நண்பனாக, சிறந்ததொரு வழிகாட்டியாக இருக்கும்.

எம்மில் மறைந்திருக்கும் ஆற்றல்களைக் கண்டுபிடிப்பதற்கும், தெளிவான சிறந்த அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும் வாசிப்புப் பழக்கம் மிக முக்கியமானது. கலைகளைப் படிப்பதும் ஒரு கலைதான். அக்கலைகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட கலைதான் வாசிப்புக் கலை. வாசிப்புக் கலைக்கு தினசரி பத்திரிகைகள் உச்சகட்ட பங்களிப்பைச் செய்கிறது. அந்த பத்திரிகைகளை தொழில்நுட்பத்தைக்கொண்டு அழிக்காமல் பாதுகாக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

நன்றி:உமர் அலி உஸ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *