புலிக்கதையால் வரலாற்றில் இடம்பிடித்தார் விஜயகலா!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டுமென யாழ்ப்பாணத்தில் வைத்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக சி.ஐ.டியினர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

அரசியலமைப்பின் 157 (அ) ஆம் பிரிவின்கீழேயே வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் இப்பிரிவின் கீழ் தொடுக்கப்படும் முதல் வழக்கு இதுவாகும் என சட்டநிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை, விஜயகலா எம்.பியின் கருத்தானது குற்றவியல் சட்டத்தின் 20 ஆம் பிரிவையும் மீறும் வகையில் அமைந்துள்ளது.

புலிகள் தொடர்பில் விஜயகலா எம்.பி. வெளியிட்ட கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதற்கு எதிராகப் பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மஹிந்த அணியினர் நாடாளுமன்றத்துக்குள்ளும் போராட்டம் நடத்தியிருந்தனர்.

எதிர்ப்புக்களையடுத்தும் ஐ.தே.க. தலைமைப்பீடத்தின் அழுத்தத்தாலும் தான் வகித்த இராஜாங்க அமைச்சுப் பதவியை விஜயகலா இராஜிநாமா செய்திருந்தார்.

அதன் பின்னர் விஜயகலா எம்.பி. வெளியிட்ட கருத்தானது அரசியலமைப்பையோ அல்லது நாட்டின் சட்டத்தையோ மீறும் வகையில் அமையுமாயின் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு சபாநாயகர் பணித்திருந்தார்.

இதன்பிரகாரமே வழக்குத் தொடுக்கும் உத்தரவைப் பொலிஸ்மா அதிபருக்கு சட்டமா அதிபர் அண்மையில் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *