தேர்தல் சட்டத்தை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்! – மஹிந்த தேசப்பிரிய எச்சரிக்கை

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட 35 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.தேர்தல் சட்டங்களை மீறுவோர் – தேர்தலில் அரச ஆதனங்களைப் பயன்படுத்துவோர் – அரசியலில் ஈடுபடும் அரச ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

– இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஆதரவாளர்கள் அநீதியாக அத்துமீறலில் ஈடுபட வேட்பாளர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் அனுமதிக்கக்கூடாது. அத்துடன், அரசியல்வாதிகள் சட்டதிட்டங்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஊடகங்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும். ஒருவரை ஊக்குவித்து ஒருவரைப் பாதிக்கும் வகையில் ஊடகங்கள் செயற்படக்கூடாது.

சமூக ஊடகங்கள் ஊடாக தவறான பிரசாரங்களை மேற்கொள்ளாமல் – தவறான செய்திகளை வெளியிடாமல் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

உள்நாட்டு, வெளிநாட்டு சமூக ஊடகங்கள் இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும். வாக்களிப்பதைப் படமெடுத்து வெளிப்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது .

வாக்களிப்புக்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் நிசப்த காலம் என்பதால் அந்தக் காலப்பகுதிக்குள் எந்தவகையான பிரசாரங்களையும் செய்யமுடியாது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” – என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *