நல்லூர் பாதுகாப்பு சோதனைகள் உடன் கைவிடப்படுதல் அவசியம்! – நாடாளுமன்றில் சிறிதரன் வலியுறுத்து

“யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலைய திருவிழாக் காலங்களில் இராணுவம் சப்பாத்துக்களுடனும் துப்பாகிகளுடனும் ஆலய வளாகத்துக்குள் நுழைந்து தமிழர்களை சோதிக்கும் செயற்பாடுகள் உடனடியாக கைவிடப்படல் வேண்டும். ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.

சபையில் நேற்று நடைபெற்ற அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக சட்டத்தின் மீதான ஒழுங்குவிதிகள் குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா தமிழர்களின் அடையாள நிகழ்வாகக் கருதப்படுகின்றது. இந்த ஆலய வரலாற்றில் இதுவரை ஆலயத்துக்குள் செல்பவர்களை பரிசோதனை செய்ததாக வரலாறுகள் இல்லை. நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மிகவும் புனிதமான பகுதி. ஆனால், இன்று அங்கு சப்பாத்துக்களுடனும் துப்பாக்கிகளுடனும் உள்நுழைந்து தமிழ் மக்களை சோதிக்கும் நிலைமை உருவாகியுள்ளது. சீருடை தரித்த இராணுவத்தினரின் இந்த நடைமுறைகள் ஏற்றக்தகாதவை. ஆலய நிர்வாகமும் சரி, பொதுமக்களும் சரி எவரும் இவ்வாறு பாதுகாப்புக் கேட்கவில்லை.

தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்திவிட்டதாகக் கூறும் அரசு வடக்கில் மட்டும் ஏன் இவ்வாறு கெடுபிடிகளைக் கையாள்கின்றது என்பது தெரியவில்லை. யாழ்ப்பாணம் நல்லூர் ஒரு கலாசார புனித பூமி. அங்கு எமது கலாசாரத்தை நாசமாக்கும் வகையில் இராணுவம் நடந்துகொள்கின்றது. இந்தப் புனிதத் தன்மையை கெடுக்காது இராணுவம் உடனடியாக வெளியேற வேண்டும். ஆலய வளாகத்துக்கு வெளியில் பல இடங்கள் உள்ளன. அங்கு சோதனைகளை நடத்தமுடியும். ஆலய வளாகத்துக்குள் அவ்வாறு மக்களை சோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறக்கூடாது. சோதனைகள் என்ற பெயரில் ஆலயத்துக்குள் நுழையும் எமது மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர்.

2009ஆம் ஆண்டின் பின்னர் வடக்கில் ஒரு வெடிகுண்டேனும் வெடிக்கவில்லை. இதனைக் கவனத்தில் கொண்டு நல்லூரில் இருந்து இராணுவத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருஷாந்தியின் நினைவுநாள் இன்று. அவர் மட்டும் அல்ல அவரது உறவினர்கள் பலர் அதே இடத்தில் கொல்லப்பட்டனர். கிருஷாந்தியின் கொலை உண்மை வெளியில் வந்தவுடன்தான் யாழ்ப்பாணத்தில் பல இளைஞர், யுவதிகள் கொல்லபட்ட உண்மைகள் வெளிவந்தன. ஆனால், இன்றுவரை அதற்கான தீர்வுகள் நீதி எமக்கு கிடைக்கவில்லை.

காணாமல்போனோர் உறவினர்கள் 900 நாட்களாகப் போராடி வருகின்றனர். காணாமல்போனோரைத் தேடும் அலுவலகங்கள் நியமிக்கப்பட்டும்கூட இன்றுவரை நீதி கிடைக்கவில்லை” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *