நானே பிரதமர்! மைத்திரியின் செயல் சட்டவிரோதம்!! – ரணில் விடாப்பிடி

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தால் மட்டுமே முடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போதைய அரசியல் குழப்பநிலை குறித்து பி.பி.சி. தமிழோசைக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய செவ்வி வருமாறு,

கே. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை உங்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதா?

ப. இந்த நடவடிக்கையை அவர் நவம்பர் மாதத்தில்தான் எடுப்பார் என எதிர்பார்த்தோம். இப்போது எடுப்பார் என நினைக்கவில்லை.

கே. 2015 பாராளுமன்றத் தேர்தல்வாக்கிலேயே உங்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் தோன்றியதாக சொல்லப்பட்டது. ஜனாதிபதி இம்மாதிரி நடந்துகொள்வார் என எதிர்பார்த்தீர்களா?

ப. நவம்பர் இரண்டாம் வாரத்தில் இப்படி நடக்கலாம் என எதிர்பார்த்தோம். பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் பெரிய கருத்து வேறுபாடுகள் இல்லை. அதற்குப் பிறகு பல விஷயங்களில் ஒப்புதல் இருந்தது. சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன.

கே. உங்களை நீக்கிய பிறகு நீங்கள் ஏன், உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை?

ப. இல்லை. இதனை பாராளுமன்றம்தான் முடிவுசெய்ய வேண்டும். பிரதமர் என்பவர் பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றவர். இலங்கையில் இதனை பாராளுமன்றம்தான் முடிவுசெய்யும். பாராளுமன்றத்தின் மேலாதிக்கத்தை நாங்கள் நம்புகிறோம். இதில் அரசியல்சாஸனம் மிகத் தெளிவாக இருக்கிறது. யாரிடம் பெரும்பான்மை இருக்கிறதோ, அவரே பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றவர்.

கே. பிரதமரை நீக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக ஜனாதிபதி சொல்கிறார்..

ப. நாங்கள் அதை ஏற்கவில்லை. பாராளுமன்றம்தான் அதை முடிவுசெய்யும். பெரும்பான்மை இருப்பதாக ஒருவர் சொன்னால் அதை அவர் நிரூபித்தாக வேண்டும். அதுதான் பாராளுமன்ற ஜனநாயகம்.

கே. முன்னதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யவையும் உங்கள் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் பிரதமராக்க முயன்றதாகவும் அவர்கள் மறுத்துவிட்டதாகவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். அவர்கள் இது குறித்து உங்களிடம் சொன்னார்களா?

ப. மறைமுகமாகச் சொன்னார்கள்.

கே. நீங்கள் மேலை நாடுகளுக்கு ஆதரவான நபர் என்றும் வெளி சக்திகளுக்கு ஏற்ற வகையில் செயல்படுபவர் என்றும் உங்களைச் சித்தரிக்கிறார் ஜனாதிபதி..

ப. இலங்கை நிலவரத்திற்கு ஏற்றபடிதான் நான் செயல்படுகிறேன். ஆனால், மேலை நாடுகள், இந்தியா, சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுடன் நல்லுறவை பேணுகிறோம். எங்களுக்கு எதிரிகள் இல்லை.

கே. உங்களுடைய மூன்றாண்டுகால ஆட்சியில் முக்கியமான முடிவுகள் உங்களைச் சுற்றியிருந்தவர்களால் எடுக்கப்பட்டன என்றும் அமைச்சரவை முடிவெடுக்கவில்லையென்றும் ஜனாதிபதி குற்றம்சாட்டியிருக்கிறார்.

ப. இல்லை. எல்லா முடிவுகளுமே ஜனாதிபதியாலோ, அமைச்சரவையாலோ என்னாலோதான் எடுக்கப்பட்டன. என்னைச் சுற்றியிருந்தவர்கள் முடிவெடுக்க முடியாது. அமைச்சர்கள் முடிவெடுத்தார்கள். அல்லது கேபினட் குழுக்கள் முடிவெடுத்தன. அல்லது ஜனாதிபதி முடிவெடுத்தார். நானாக எந்த முடிவையும் எடுக்கவில்லை.

கே. மஹிந்த பாராளுமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் என்ன நடக்கும்?

ப. பெரும்பான்மை கொண்டிருப்பவரைத் கண்டறிய வேண்டும். எங்களிடம்தான் பெரும்பான்மை இருக்கிறது. சபாநாயகரின் உத்தரவு மிகத் தெளிவானது. எதிர் தரப்பு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் இல்லாவிட்டால் எங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாகத்தான் அர்த்தம்.

கே. தமிழ் அரசியல் கைதிகளை 2015க்குப் பிறகு விடுவிக்க மைத்திரிபால சிறிசேன மறுத்ததாக மங்கள சமரவீர கூறியிருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கிறீர்களா?

ப. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் உள்ளே இருக்கின்றனர். யாரையெல்லாம் விடுதலை செய்வது என்பது குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. இது குறித்து ஜனாதிபதி என்ன நினைத்தார் என எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் இது குறித்து விவாதிக்கவில்லை.

கைதிகள் குறித்து தொடர்ந்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். சிலர் 15-20 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அம்மாதிரியானவர்கள் குறித்த வழக்குகளை பச்சாதாபத்துடன் அணுகுகிறோம்.

கே. ஜனாதிபதியை கொல்ல முயற்சி நடந்ததாக அவர் கூறியதாக கூறப்பட்டது. அதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ப. காவல்துறை விசாரித்து வருகிறது. இது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஜனாதிபதிக்கு தெரிவிக்கும்படி காவல்துறையிடம் சொல்லியிருக்கிறேன்.

கே. இலங்கையின் தற்போதைய மோசமான பொருளாதார நிலைமைக்கு நீங்களே காரணமென்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

ப. சர்வதேச நிதியம் மற்றும் பல அறிக்கைகளைப் பார்த்தால் நாடு பொருளாதார ரீதியில் சிறப்பாக செயல்படுவது தெரியும். நாடு முன்னேறியிருக்கிறது. பொருளாதாரம் ஸ்திரமடைந்திருக்கிறது. கடன்கள் திரும்பச் செலுத்தப்பட்டுவருகின்றன. விலைவாசி உயர்வு ஒரு பிரச்சனைதான். ஆனால், உலகம் முழுவதும் இந்தப் பிரச்சனை இருக்கிறது. இந்தியாவில் இந்தப் பிரச்சனை இருக்கிறது. இந்தோனேசியாவில் இருக்கிறது. டாலர் மதிப்பு உயர்வதும் பெட்ரோலியத்தின் விலை உயர்வதும் இதற்குக் காரணம். உலகின் பல நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

கே. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்த சந்தர்ப்பத்திலாவது ஜனாதிபதி உஹ்களோடு ஒத்துழைக்க மறுத்திருக்கிறாரா?

ப. பல விஷயங்களில் அவருக்கென கருத்துகள் உண்டு. அதைப் பற்றி விவாதித்து, தீர்த்திருக்கிறோம். எல்லா விஷயங்களிலும் ஒத்துப்போகவில்லையென்பது உண்மைதான். ஆனால், பெரிதாக எந்த சர்ச்சையுமில்லை.

கே. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நீங்களும் மைத்திரிபால சிறிசேனவும் ஒன்றாக இணைந்தீர்கள். அதன் பிறகு என்ன நடந்தது? பிளவு எப்படி ஏற்பட்டது?

ப. அவரோடு எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. கடந்த மாதத்திலிருந்து அவர்தான் என்னைப் பற்றி புகார்கூற ஆரம்பித்தார்.

கே. ஆனால், எட்டு மாதங்களுக்கு முன்பிருந்தே அவர் உங்களுக்குப் பதிலாக ஆட்களைத் தேடிவந்தார்..

ப. அவர் அந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அதைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை. எனக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதில் நான் வெற்றிபெற்றேன். பிரதமருக்கு எதிராக தான் சதி செய்வதை நாட்டுக்குத் தெரிவிக்க இதையெல்லாம் அவர் செய்தாரோ என்னவோ..

கே. வடக்கையும் கிழக்கையும் இணைக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென ஜனாதிபதி கூறியிருக்கிறார். கூட்டமைப்பின் ஆதரவுடன்தான் மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வர முடியுமென்றால் என்ன செய்வீர்கள்?

ப. வடக்கு – கிழக்கு இணைப்பைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர பிற கட்சிகள் எதுவும் அந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை. மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதைப் பற்றிக் கேட்க வேண்டுமென்றால், அதற்கு சரியான நபர் எதிர்க்கட்சித் தலைவர்தான். அவர்தான் ஜனாதிபதியோடு இது தொடர்பாக நீண்ட விவாதங்களை நடத்தியிருக்கிறார். மாகாண கவுன்சில்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டுமென அவரது கட்சி கோரியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *