அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தவறின் கூட்டமைப்பின் நாள்கள் எண்ணப்படும்! – பங்காளியான ரெலோ கடும் எச்சரிக்கை

கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் கோயில் இடித்து அழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு திரண்ட மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதல் மிகவும் கீழ்த்தரமான செயல் என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது ரெலோ அமைப்பு.

இது தொடர்பில் அந்தக் கட்சி அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் கோயில் இடித்து அழிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்கு திரண்ட தமிழ் மக்களுக்கு எதிராக பௌத்த சிங்கள இனவெறி தனது கோர முகத்தைக் காட்டியுள்ளது. தென்கைலை ஆதீனம் அகத்தியர் அடிகள் மீதும், கன்னியா வெந்நீருற்றுக் காணியின் உரிமையாளரான பெண் ஒவர் மீதும், மேற்கொள்ளப்பட்ட கீழ்த்தரமான தாக்குதல் மூலம், பௌத்த – சிங்கள இனவெறியின் காட்டுமிராண்டித்தம் மீண்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும், இந்த வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தி, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட அங்கிருந்த பொலிஸ் படை தவறியிருக்கின்றது.

மாறாக, அங்கு திரண்டு வந்திருந்த தமிழ் மக்கள் மீது அடக்குமுறை கலந்த அழுத்தம், பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரபட்சமின்றி செயற்பட வேண்டிய பொலிஸ் அதிகாரிகள் சிங்கள – பௌத்த உணர்வாளர்களாகச் செயற்பட்டிருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது. இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் அரசின் அணுகுமுறையும் நடவடிக்கையுமே.

ஆயிரம் விகாரைகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்போவதாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பகிரங்கமாக அறிவிப்புச் செய்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமை தாங்கும் அரசே கன்னியா பிரச்சினைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

இதேவேளையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவில்லை என்றால், நான் இன்று பிரதமராக உங்கள் முன் நின்று கொண்டிருக்க முடியாது என்று சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை நகரில் மனத்திறந்து பேசிய ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அரசைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு, கன்னியா பிரச்சிரனையில் தமிழ் மக்களின் உரிமையை நிலைநாட்டுவதோடு உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக எடுத்ததாக வேண்டும்.

கூட்டமைப்பின் தலைவரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் திருகோணமலை மாவட்டத்தில், தமது அடிப்படை உரிமைகளுக்கு தமிழ் மக்கள் போராட வேண்டியுள்ள நிலைமையில், அரசுக்கு அழுத்தம் கொடுத்து பிரச்சினையைத் சுமுகமாகத் தீர்த்து வைக்க கூட்டமைப்பு தவறினால் அதன் நாட்கள் எண்ணப்படும் நிலைமை தவிர்க்கப்பட முடியாதது என்பதை சம்பந்தப்பட்ட சகலரும் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *