வேள்விக்குத் தடையல்ல! – நடத்துவதா, இல்லையா என்பது பிரதேச சபைகளின் கைகளில்

இந்துக் கோயில்களில் மிருக பலியிட்டு வேள்வி நடத்தத் தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அந்தந்தப் பிரதேச சபைகளின் அனுமதியுடனேயே வேள்வியை நடத்தப்பட வேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது

யாழ்ப்பாணம் – கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் சார்பில் மேன்முறையீட்டு மனுவை மூத்த சட்டத்தரணி கே.வி.எஸ்.கணேசராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார். மனுவின் எதிர் மனுதாரர்களாக, சட்டமா அதிபர், சைவ மகா சபையினர் குறிப்பிடப்பட்டிருந்தனர். இந்த மனு மீதான விவாதம், சமர்ப்பணங்கள் நிறைவடைந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

யாழ்ப்பாணக் கோயில்கள் சிலவற்றில் மிருகபலியிட்டு வேள்வி நடத்தப்படுகின்றது. அதற்கான அனுமதியை, இறைச்சிக்கடைச் சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளும் சுகாதாரத் திணைக்களமும் வழங்குகின்றன. அவ்வாறு அனுமதி வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டுமெனக் கோரி, சைவ மகா சபையினர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தலையீட்டு நீதிப் பேராணை மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை, சட்டத்தரணி வி.மணிவண்ணன், 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி தாக்கல் செய்திருந்தார். அன்றிலிருந்து வேள்விக்கு இடைக்காலத் தடை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஒன்றரை வருடங்கள் விசாரணையிலிருந்த இந்த வழக்குக்கு 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதியன்று இறுதிக் கட்டளையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் வழங்கினார்.

இந்துக் கோயில்களில் வேள்விப் பூஜைகளின் போதும் ஏனைய எந்தப் பூஜைகளின் போதும் மிருகங்கள் பலியிடப்படுவதற்கு முற்றாகத் தடை விதிக்கப்படுகின்றது. இந்தத் தடை உத்தரவை மீறி எவரேனும் மிருக பலியிடலை மேற்கொண்டால், அது தொடர்பாக ஒரு பொதுமகன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தாலும், அதன் மீது உடனடியாக விசாரணை செய்து குற்றமிழைத்தவரைக் கைதுசெய்து அருகிலுள்ள நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிடப்படுகின்றது எனவும் அப்போதைய யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கட்டளையிட்டிருந்தார்.

இந்தத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்தும் வேள்வியின் பண்பாட்டுத் தேவையை வலியுறுத்தியும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்ட நிலையிலேயே, தடை உத்தரவு நீக்கப்பட்டது.

மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், மேன்முறையீட்டாளரான கவுணவத்தை நரசிம்ம வைரவர் கோவில் நிர்வாகத்துக்கு வழக்குச் செலவை வழங்குமாறும் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *