தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணை மந்தம்! – சிவசக்தி ஆனந்தன் எம்.பி. தெரிவிப்பு

“தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் கடந்த காலங்களில் ஆமை வேகத்திலேயே முன்னெடுக்கப்பட்ட நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் அரச சட்டத்தரணிகளின் பிரசன்னம் வழக்கு தவணைகளில் முறையாக இடம்பெறுவதில்லை. சில அரச சட்டத்தரணிகளின் கீழ்பணியாற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளே பிரசன்னமாகின்றனர். அதனால் வழக்குகளை விரைந்து நடத்துவதில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.”

– இவ்வாறு மகஸின் சிறைச்சாலையில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

“மகஸின் சிறைச்சாலைக்கு நேரில் சென்று கைதிகளைப் பார்வையிட்டேன் அதன்போதே கைதிகள் இந்த விடயத்தைத் தெரிவித்தனர்” என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கூடத்துக்கு தண்ணீரைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. குடிதண்ணீர் வசதியைப் பெற்றுக்கொள்வதற்காகக் குழாய்க்கிணறு அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறைச்சாலை வைத்தியசாலையைவிட போதனா வைத்தியசாலைக்குச் செல்வதற்கான பாதுகாப்பையும் அனுமதியையும் பெறுவதிலும் தாமதம் நிலவுகின்றது.

தற்போது எமது விடுதலை குறித்து எந்தவிதமான கவனத்தையும் எடுப்பதாக இல்லை. பல்வேறு விடயங்களுக்கான தீர்வுகளைப் பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டபோதும் அவற்றைக் கைவிட்டதன் காரணத்தால் எமது விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆகவே, இதற்குரிய பொறுப்பைக் கூறவேண்டும் என்றும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்ததோடு, என்னாலான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர்களிடம் உறுதியளித்தேன்.

தமிழ் அரசியல் கைதிகள் 95 பேர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *