‘அரசியல் தீர்வு’க்காக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் சீனா! – சரா எம்.பி. வலியுறுத்து

“இலங்கையில் நடப்பது உள்நாட்டு அரசியல் பிரச்சினை என்று ஒதுங்கிவிடாது. தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு கிட்டுவதற்கு சீனா உதவவேண்டும். அதற்கான அழுத்தத்தை கொழும்புக்கு சீனா வழங்க வேண்டும். அதற்குரிய தகுதியும் வல்லமையும் சீனாவுக்கு உண்டு.”

– இவ்வாறு இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூயுவானிடம் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ‘உதயன்’ குழுமத் தலைவருமான ஈ.சரவணபவன்.

இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூயுவான் தலைமையிலான குழுவினர் ‘உதயன்’ பணிமனைக்கு சில தினங்களுக்கு முன் சென்றனர். அவர்களுடனான சந்திப்பிலேயே சீனத்தூதுவரிடம் மேற்படி தான் வலியுறுத்தினார் என்று சரவணபவன் எம்.பி. தெரிவித்தார்.

சீனத் தூதுவரிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மற்றைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்று தூதுவராகிய நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். எனினும், இலங்கை விவகாரங்களில் குறிப்பாக தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் சீனா ஒதுங்கியிருக்கக்கூடாது.

இங்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். கொழும்புக்கு அதிக உதவிகளை வழங்கி அதன் பொருளாதார மேற்பாட்டுக்கான பங்காளியாக இருக்கின்ற சீனாவுக்கு அதற்கான தகுதியும் உரிமையும் உள்ளது.

யார் சொன்னால் இலங்கை கேட்குமோ அவர்கள் நிரந்தரத் தீர்வுக்கான அழுத்தத்தைக் கொடுத்தால் மட்டுமே தீர்வு சாத்தியமாகும். அதனைச் சீனா செய்யவேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதில் தமிழ் மக்கள் காத்திரமான பங்களிப்பை ஆற்றினார்கள். புதிய அரசமைப்புக்காக அவர்கள் அதைச் செய்திருந்தனர். ஆனால், புதிய அரசமைப்பு உருவாக்கல் முயற்சி அநேகமாகத் தோல்வியடைந்து விட்டது. இந்தநிலையில், இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்கு சீனா முன்வர வேண்டும்.

இதேவேளை, வடக்கில் ஊடகங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரணிலின் ஆட்சியிலும்கூட இந்த விடயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை” – என்றார்.

பதில் வழங்கிப் பேசிய சீனத் தூதுவர் தெரிவித்ததாவது:-

“இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு தனிச் சிறப்பானது.

வடக்குப் பகுதியில் அண்மையில் தொல்பொருள் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் தக்க சான்றுகள். எனினும், கடந்த காலங்களில் வடக்குடன் சீனாவுக்கு இருந்த உறவில் பெரும் இடைவெளி உள்ளது என்பதை ஏற்கின்றேன். இது வடக்குக்கான எனது முதல் பயணம். இனிவரும் காலங்களில் இது சரி செய்யப்படும். எமக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் பாகுபாடில்லை. அனைத்து இன மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்வதையே சீனா விரும்புகின்றது. சீனா தமிழர்களுடன் தொடர்ந்தும் இருக்கும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *