“மே 18 நல்லூரில் குண்டுத் தாக்குதல்!” – ஆளுநருக்கு அநாமதேயக் கடிதம்; உடனடி விசாரணைக்கு அவர் பணிப்பு

 

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நாளை சனிக்கிழமை குண்டுத் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தெரிவித்து தனக்கு அநாமதேயக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தவர் தொடர்பில் விரைவான – விரிவான விசாரணையை மேற்கொண்டு அவரைக் கைதுசெய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை கடைப்பிடிக்கப்படவுள்ள நிலையில் இந்த அநாமதேயக் கடிதம் ஆளுநரின் அலுவலகத்துக்குக் கிடைத்துள்ளது.

“நல்லூர் ஆலயத்தில் எதிர்வரும் 18ஆம் திகதி எனது கணவரும் வேறு சிலரும் குண்டுத் தாக்குதல் நடத்தவுள்ளனர்” என்று குறிப்பிட்டுப் பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்துக்கு இன்று கிடைத்தது. அதனைப் பார்வையிட்ட ஆளுநரின் பிரத்தியேக அலுவலர் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

கடிதம் தொடர்பில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருடன் தொலைபேசியில் உரையாடிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அதனை வரைந்தவர், அது எங்கிருந்து அனுப்பப்பட்டது போன்ற விடயங்கள் தொடர்பில் விரைவான – விரிவான விசாரணைகளை முன்னெடுக்க அறிவுறுத்தினார்.

ஆளுநரின் அறிவுறுத்தலை உடன் நடைமுறைப்படுத்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைப் பணித்த வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், நல்லூர் ஆலயத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவும் அறிவுறுத்தினார்.

இதனையடுத்து அநாமதேயக் கடிதம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், இன்று நண்பகல் தொடக்கம் நல்லூர் ஆலயச் சூழலின் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இராணுவத்தினரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழ நல்லூரில் நாளை சனிக்கிழமை வைகாசி விசாக உற்சவம் இடம்பெறுகின்றது. இதேவேளை, இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நாளை சனிக்கிழமை தமிழ் மக்கள் முன்னெடுக்கவுள்ள நிலையில் இந்த அநாமதேயக்கடிதம் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *