அதிஉயர் சபையை கேவலப்படுத்தாதீர் – இந்து குருமார் ஒன்றியம் கடும் கண்டனம்!

நாட்டில் அரசியலில் ஏற்பட்டுள்ள ஸ்தீரமற்ற நிலையை நிவர்த்திக்கும் வகையில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த தீர்வு ஒன்றை காண வேண்டும்.

அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் அரசியல்வாதிகளின் உயர்பீடமான நாடாளுமன்றத்தில் நடந்துக்கொள்ளும் கேவலமான விதம் தொடர்பில் இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் மற்றும் அகில இலங்கை இந்து மகா சபை ஊடாக தனது கண்டனத்தை தெரிவிக்கின்றது என மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொது செயலாளர் சிவ ஸ்ரீ வேலு சுரேஸ்வர குருக்கள் தெரிவித்தார்.

18.11.2018 அன்று அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இந்த புனிதமான இலங்கை நாட்டை எதிர்வரும் காலங்களில் அதன் புனித தன்மையை பேணும் வகையில் இந்த கேவலமான நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நாட்டை சரியான பாதையில் வழிநடத்த ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

மக்களின் வாக்குகளால் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனசாட்சி மிக்கவர்களாக செயல்பட வேண்டும்.

இந்நாட்டில் நடைகின்ற விடயங்களை அவ்வப்போது, ஊடகங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் கேவலமான நிகழ்வுகள் நடந்தேறுவதை வன்மையாக கண்டிக்கும் எமது ஒன்றியம் வெளிநாட்டவர்களும் பார்வையிடுவதை எதிர்காலத்தில் தவிர்க்க உங்களது சேவைகள் தொடர வேண்டும்.

அதேவேளையில், மலையகம் உள்ளிட்ட நாட்டில் அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடு சீர்கேடான இந்த நிலையில் சிந்தித்து நிதானமாக செயல்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்புகளின் போது அவர்களின் நிலைபாட்டை நாட்டின் எதிர்காலத்திலும், தமது மக்களின் எதிர்காலத்திலும் தீர்மானிக்கும் வகையில் தீர்க்கமாக சிந்தித்து வழங்குவதில் செயல்பட வேண்டும்.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சி கண்டுள்ள இந்த நாட்டை இக்கட்டான சூழ்நிலைக்கு மீண்டும் தள்ளிவிடாது  நாடாளுமன்றத்தில் அராஜகம் செய்யாமல் நாட்டின் எதிர்காலத்திற்கு தெளிவான ஒரு சூழ்நிலையை நகர்த்தி செல்லவும் வழியுறுத்துகின்றோம்.

மலையக தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 26ம் திகதி அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து பிரதான பஸ் தரிப்பிடம் வரை அமைதி பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

இதில் மலையகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இந்து ஆலயங்களின் குருமார்கள் கட்டாயமாக கலந்து கொண்டு இப் பேரணியை முன்னெடுக்க வேண்டும். உயர்வு, தாழ்வு, கௌரவம் என்ற மனபான்மையை அகற்றி மானமுள்ள அனைத்து இந்து குருமார்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும் என்பதோடு, தொழிலாளர்களின் உழைப்பினால் தட்சனை பெறும் குருமார்கள் அணைவரும் இதில் முன்நிற்க வேண்டும் என அழைப்பு விடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தனர்.

க.கிசாந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *