டைட்டானிக் மூழ்கியபோது பலகையைப் பிடித்துக் கொண்டு தப்பியவர், விவரித்த பயங்கர நினைவுகள்

டைட்டானிக் தனது முதல் பயணத்தின் போது கடலுக்குள் மூழ்கி, பேரழிவை சந்தித்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. இருப்பினும், உயிர் பிழைத்த ஃபிராங்க் ப்ரெண்டிஸ் கொடுத்த முதல் சாட்சியம், இன்று வரை கப்பலில் இருந்தவர்கள் உணர்ந்த அந்த அதி பயங்கரத்தின் தாக்கத்தை நமக்கு கடத்துகிறது.

டைட்டானிக் கப்பலில் மூழ்கி உயிர் பிழைத்த போது ஃபிராங்க் ப்ரெண்டிஸின் வயது 23. அவரிடம் 67 ஆண்டுகளுக்குப் பின்னர் பிபிசி நேர்காணல் செய்தது. அந்த பயங்கரமான இரவின் தாக்கம் பல ஆண்டுகளுக்கு பின்னரும் அவருக்குள் கலக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது நேர்காணலில் பிரதிபலித்தது.

1912 இல் ஏப்ரல் 14ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலின் பனிப்பாறையில் டைட்டானிக் கப்பல் மோதி முற்றிலும் கடலுக்குள் மூழ்கியது. இதனால் 1,500-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர்.

டைட்டானிக் கப்பலின் முதல் பயணத்தில் ப்ரெண்டிஸ், பணம் மற்றும் பிற உடமைகளை கையாளும் உதவியாளராக பணிபுரிந்தார். பிபிசியின் 1979 ஆவணப்பட தொடரான “தி கிரேட் லைனர்ஸ்’’-இல் அன்றிரவு நடந்த சம்பவங்களை பற்றி பகிர்ந்த அவர், `ஏதோ தவறு நடக்க போகிறது’ என்பதை உணர்ந்த அந்த தருணத்தை நினைவு கூர்ந்தார்.

“நான் நினைத்தது போன்று எந்த பாதிப்பும் அப்போது ஏற்படவில்லை. காரில் பிரேக் ஜாம் ஆவது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. அவ்வளவே. கப்பல் அப்படியே நின்றது. கப்பலில் இருந்த சிறிய சாளரம் வழியாக நான் வெளியே பார்த்தேன். வானம் தெளிவாக இருந்தது. நட்சத்திரங்கள் பிரகாசித்தன. கடல் அமைதியாக இருந்தது. என்ன நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று விவரிக்கிறார்.

  • டைட்டானிக்

படக்குறிப்பு,1912 இல் ஏப்ரல் 14ஆம் தேதி அட்லாண்டிக் பெருங்கடலின் பனிப்பாறையில் டைட்டானிக் கப்பல் மோதி முற்றிலும் கடலுக்குள் மூழ்கியது.

ப்ரெண்டிஸ் தனது கேபினை விட்டு வெளியே சென்று பார்வையிட்ட போது அவர் சிறிய அளவிலான பனிப்பாறையை கண்டார். ஆனால் சேதம் விளைவிக்கும் பனிப்பாறைகள் மற்றும் கடல் மட்டத்தில் மாற்றம் என பெரிய ஆபத்து ஏற்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை. எவ்வாறாயினும், மூழ்கடிக்க முடியாததாக கருதப்பட்ட அந்த கப்பலின் அடிப்பகுதியில் ஏற்பட்ட சேதம் பேரழிவு தரக்கூடியதாக இருந்தது.

அந்த சமயத்தில், பெண்களும் குழந்தைகளும் உயிர்காக்கும் படகுகளில் ஏற வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, ஆனால் பலர் தயங்கினர். அதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக ப்ரெண்டிஸ் குறிப்பிட்டார் : அது தண்ணீரில் 70-அடி (21.3மீ) ஆழத்தில் இருந்தது. மேலும், டைட்டானிக் கப்பல் மூழ்கும் என்பதை அவர்கள் யூகிக்க வில்லை.

“எங்களிடம் 16 உயிர்காக்கும் படகுகள் இருந்தன, அவை ஒவ்வொன்றும் 50 பேர் பயணிக்கும் திறன் உடையது. அவை முழுமையாக பயன்படுத்தப்பட்டிருந்தால் நாம் 800 பேரை காப்பாற்றியிருக்கலாம். ஆனால் எங்களால் 500 பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது” என்று அவர் கூறினார்.

ப்ரெண்டிஸும் இன்னும் சில உதவியாளர்களும் பொருள்வைக்கும் அறையில் இருந்த அனைத்து பிஸ்கட்களையும் எடுத்து வருமாறு கட்டளையிடப்பட்டனர். அவர்கள் பிஸ்கட்டுகளை எடுத்து கொண்டு தளத்திற்குத் திரும்பிய போது, கப்பல் மோசமாக சரிந்துக் கொண்டிருந்தது, தடுமாறிய நிலையில் அவரால் உயிர்காக்கும் படகுகளை நெருங்க முடியவில்லை.

அவர் தனது உயிர் காக்கும் ஜாக்கெட்டை அணிய விரைந்தபோது, கப்பல் வேகமாக மூழ்கி கொண்டிருந்தது . மூன்றாம் வகுப்பிலிருந்து பயணிகள் கப்பலின் தரை தளத்தில் குவிந்ததால் பெரும் சலசலப்பு எழுந்தது.

யாரும் எதிர்பாராத வண்ணம் டைட்டானிக் இரண்டாக உடைந்தது. “உடைந்த கப்பல், கடலுக்கு மேலே செங்குத்தாக மிதந்தது , கப்பலின் அனைத்து பாகங்களும் நொறுங்குவதை கேட்க முடிந்தது” என்றார்.

  • டைட்டானிக்

படக்குறிப்பு,1912ஆம் ஆண்டில் டைட்டானிக் கப்பல்

பனிப்பாறையில் மோதி உடைந்த கப்பலின் ஒரு பகுதி, கடலின் மேல்மட்டத்தில் உயரத்தில் மிதந்து கொண்டிருந்தது. ப்ரெண்டிஸ் அதன் ஒரு பலகையை பிடித்தபடி மிதந்தார். அங்கிருந்து நகருவதை தவிர வேறு வழியில்லை என்றே அவருக்கு தோன்றியது.

“என்னிடம் லைஃப் பெல்ட் இருந்தது. பயங்கர வேகத்துடன் கடல் நீருக்கு எதிர்விசையில் நகர முற்பட்டேன். அங்கு என்னைச் சுற்றி சடலங்கள் மிதந்தன. உயிரற்ற உடல்களுக்கு மத்தியில், பனிக் கடலில் மிதந்து கொண்டிருந்த போது, கப்பல் தண்ணீருக்குள் மறைவதைப் பார்த்தேன். நான் இறக்க விரும்பவில்லை, ஆனால் தப்பிப்பதற்கான எந்த வழியும் அங்கு இல்லை. நான் கொஞ்சம் கொஞ்சமாக உறைந்துக் கொண்டிருந்தேன். கடவுளின் கிருபையால் ஒரு உயிர்காக்கும் படகு வருவதைக் கண்டேன், அவர்கள் என்னை படகினுள் இழுத்துப் போட்டனர்.’’ என்றார்.

ப்ரெண்டிஸ் தான் இருந்த இடத்தை சற்று உற்றுநோக்கியபோது, வர்ஜீனியா எஸ்டெல் கிளார்க்கின் அருகில் தான் அமர்ந்திருப்பதை அறிந்தார். கிளார்க்கின் முகம் பரிச்சயமானதாக தோன்றியது. கப்பலில் இருந்த போது, ஒரு இளம் தேனிலவு தம்பதியருக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் கொடுத்து ப்ரெண்டிஸ் உதவினார். அந்த பெண் தான் கிளார்க் என்பது அவர் நினைவுக்கு வந்தது.

கப்பலில் இருந்து பெண்களை காப்பாற்றி கொண்டிருந்த சமயத்தில், கிளார்க்கிடம் தன் கணவர் வால்டரை விட்டுவிட்டு ஒரு லைஃப் படகில் ஏறும் படி ப்ரெண்டிஸ் வற்புறுத்தினார், உங்கள் பின்னால் உங்கள் கணவர் பின் தொடர்ந்து வந்துவிடுவார் என்று அவருக்கு உறுதியளித்தார்.

  • டைட்டானிக்

படக்குறிப்பு,டைட்டானிக் மூழ்குவதை போன்று உருவாக்கப்பட்ட படம்

கிளார்க் ப்ரெண்டிஸிடம் “என் கணவரைப் பார்த்தீர்களா?” என்று கேட்டார். இறந்தவர்களில் கிளார்கின் கணவரும் ஒருவர் என்பது பின்னர் தான் தெரியவந்தது.

காப்பாற்றப்பட்ட தருணத்தை பற்றி ப்ரெண்டிஸ் பகிர்கையில், கிட்டத்தட்ட “உறைந்த பனிக் கட்டி” போன்று தன் உடல் மாறிவிட்டதாகவும், கிளார்க் அந்த சமயத்தில் ஒரு மேலங்கியை தன் மீது போர்த்தி உயிரை மீட்டதாகவும் கூறினார்.

“நான் அவளைக் காப்பாற்றினேன் – அவள் என்னை காப்பாற்றினாள்,” என்றார் ப்ரெண்டிஸ்.

RMS Carpathia கப்பல் கிட்டத்தட்ட 60 மைல்கள் (96.5km) தொலைவில் இருந்தது, அதன் வயர்லெஸ் ஆபரேட்டர் டைட்டானிக்கின் அவசர கால அபாய அழைப்பை ஏற்றது. உடனடியாக திசையை மாற்றி பயணித்து, சுமார் 700 பேரை காப்பாற்றி நியூயார்க்கில் பாதுகாப்பாக கொண்டு வந்து சேர்த்தது.

ப்ரெண்டிஸ் 1982 ஆம் ஆண்டு 93 வயதில் காலமானார். டைட்டானிக் சம்பவத்துக்கு பிறகு, தன் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும், அவரது வாழ்க்கையில் நிழலாடிய ஒரு துயர சம்பவத்தின் தெளிவான நினைவூட்டலை சுமக்கும் ஒரு நினைவுச்சின்னத்தை வைத்திருந்தார். அன்று இரவு அவர் அணிந்திருந்த கடிகாரம் 02:20க்கு உறைந்து போய் நின்றது.

“நான் உறைந்து போனதை போலவே அதுவும் உறைந்துவிட்டது” என்று அவர் கூறினார்.

இப்போது டைட்டானிக் கப்பலைப் பற்றிப் பேசுவது உங்கள் மனதை பாதிக்கிறதா என்று அவரிடன் கேட்டதற்கு, “இன்று இரவும் நான் அதைப் பற்றி கனவு காண்பேன். இப்போது எனக்கு வயதாகிவிட்டது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் இரவில் படுத்திருக்கும் போது அனைத்து சம்பவங்களும் மீண்டுமொரு முறை கனவில் நிகழும். ” என்றார் ப்ரெண்டிஸ்.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *