இலங்கையில் 22% மக்களுக்கு வறுமை: உலக வங்கி அறிக்கை

2022 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சிப் போக்கினை எட்டியுள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அதிகரித்த வறுமை, வருமான சமத்துவமின்மை, தொழிலாளர் பிரச்சினைகளை நாடு எதிர்நோக்கியுள்ளதாகவும் உலக வங்கி அறிவித்துள்ளது.

தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும் வறுமை நிலை அதிகரித்து வருகின்ற நிலையில், 2023 ஆம் ஆண்டில் 25.9 வீதமான இலங்கையர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தமை தெரியவந்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய மற்றும் இலங்கைக்கான உலக வங்கியின் பொருளாதார மேம்படுத்தல்கள் நிகழ்வின் அங்குரார்ப்பணம் கொழும்பில் இன்று (02) நடைபெற்றது.

2022 ஆம் ஆண்டின் கடுமையான பொருளாதார வீழ்ச்சியைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 2.2% ஸ்திரமான வளர்ச்சியை எட்டும் என எதிர்வுகூறப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அண்மைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், உயர்வான வறுமை மட்டங்கள், வருமான சமத்துவமின்மை, தொழிலாளர் பிரச்சினைகளால் நாடு தற்போதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள, இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தல் மீட்சிக்கான பாலம் எனும் அறிக்கைக்கு அமைய, இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருவதாகவும், புதிய அரச வரிக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்புலத்தில் வருமான அதிகரிப்பு காணப்படுவதாகவும், ஐந்து தசாப்த காலத்தில் முதல் முறையாக நடைமுறைக் கணக்கில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பணப்பரிமாற்ற அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத்துறை மீளெழுச்சி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும் வறுமை அதிகரித்துச் செல்வதுடன், 2023 ஆம் ஆண்டில் 25.9 வீதமான இலங்கையர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்தமை தெரியவந்துள்ளது.

2026 ஆம் ஆண்டு வரை வறுமை  22 வீதத்திற்கு மேல் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையின் பொருளாதாரம் சாதகமான அறிகுறிகளைக் காண்பித்தாலும்,  கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் ஆழமான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஆபத்துகள் உள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பணவீக்கத்தின் படிப்படியான அதிகரிப்பு, சிறிய நடைமுறைக் கணக்கு அதிகரிப்புகள் ஆகியவற்றால் 2025 ஆம் ஆண்டில் 2.5% வளர்ச்சியை அறிக்கை எதிர்வுகூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *