மணிக்கு 34 ஆயிரம் வேகத்தில் பூமிக்கு வரும் விண்கல்!

சுமார் 34 ஆயிரம் கிமீ வேகத்தில் விண்கல் ஒன்று பூமிக்கு அருகே இன்று கடக்க உள்ளது.

2024-ம் ஆண்டின் தொடக்கம் முதலே பல்வேறு விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில், பூமியை கடக்கும் இந்த விண்கற்கள் 2024-ம் ஆண்டின் முதல் 2 மாதங்களில் பெரும் கவனம் ஈர்த்தன.

தற்போது மூன்றாவது மாதத்தின் முதல் விண்கல்லாக, ’2024இஹெச்’(2024EH) என்று வானியல் ஆய்வாளர்களால் பெயரிடப்பட்ட

பூமி தன்னைத்தானே சுற்றுக்கொண்டு சூரியனை சுற்றிவருவது போன்றே, சூரிய குடும்பத்தின் கோள்கள், சிறுகோள்களுக்கு அப்பால் எண்ணற்ற விண்கற்களும் தமக்கான சுற்றுவட்டப் பாதையில் சூரியனை சுற்றி வருகின்றன. அவற்றில் சில பூமிக்கு நெருக்கமாக கடக்கையில் அவை பூமியின் இருப்புக்கு பீதி தரவும் கூடும்.

அளவில் சிறிய விண்கற்கள் சதா பூமியில் மீது விழுந்தபடி இருந்தாலும் அவற்றால் பூமிக்கோ அதில் வாழும் உயிரினங்களுக்கோ பாதிப்பு நேர்வதில்லை.

பூமியின் வளிமண்டலத்தை கடப்பதற்குள் அவை எரிந்து சாம்பலாகி விடுவதே இதற்கு காரணம். ஆனால் அளவில் பெரிய விண்கற்கள் பூமியின் மீது மோதுவது, அதிலுள்ள உயிரினங்களின் இருப்புக்கும், பூமி தனது அச்சில் சுழல்வதற்கும் ஊறுவிளைவிக்கும். ஆதி காலத்தில் இவ்வாறு விண்கற்கள் பூமியில் விழுந்ததற்கான தடயங்கள் இன்னும் உள்ளன.

டைனோசர்கள் உள்ளிட்ட விலங்கினங்கள் அழிவுக்கும் இந்த விண்கற்கள் காரணமானதாக சொல்லப்படுகிறது.

2024இஹெச் விண்கல் குறித்து அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசா பல்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அதன் நகர்வை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அப்பல்லோ குழுமம் எனப்படும் அடிக்கடி பூமியை குறுக்கிடும் விண்கற்கள் குடும்பத்தை சேர்ந்த 2024இஹெச் விண்கல் சுமார் 5,06,000 கிமீ தொலைவில் பூமியை கடந்து செல்லும் என நாசா கணித்துள்ளது.

இந்த தொலைவு வெகு அதிகமாகத் தோன்றினாலும், பிரபஞ்சத்தை ஆராயும் வானியலில் இது மிகவும் குறைவு. பூமிக்கு அச்சுறுத்தல் இல்லை என்ற போதும், அளவில் சிறிய அந்த விண்கல்லின் வேகம் காரணமாக அதனை ஒதுக்காது நாசா தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

மணிக்கு 34,183 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி பாயும் இந்த விண்கல்லின் வேகம், வல்லரசு நாடுகளின் கண்டம் விட்டு கண்டம் தாவும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட வேகமானது.

அளவைப் பொறுத்தும் 2024இஹெச் விண்கல் மிகவும் சிறியது. அகலத்தில் 42 அடியுடன் ஒரு பேருந்து சைஸில் இந்த விண்கல் இருக்கும். 2024இஹெச் என்ற பெயருடன் 2024ம் ஆண்டில் இந்த விண்கல் பூமியை கடக்கிறது என்றாலும், அதன் பயணத்தில் இது முதலோ, கடைசியோ கிடையாது. முன்னதாக 1927-ம் ஆண்டு ஜூன் 27 அன்று பூமியை கடந்த இந்த விண்கல், நாளை நமக்கு ஹலோ சொன்ன கையோடு, மீண்டும் 2071, ஜூன் 24 அன்று பூமியை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *