ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் பொதுத் தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழு நெருக்கடியில்

ஜனாதிபதித் தேர்தலா பொதுத் தேர்தலா அடுத்து நடைபெறப் போகிறதென்ற வாதப் பிரதிவாதங்கள் கொழும்பு அரசியலில் சூடுபிடித்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுவருவதாக எதிர்க்கட்சிகள் நேரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன.

என்றாலும், அரசாங்கம் உறுதியாக இவ்வாண்டு ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் அரசியலமைப்பின் பிரகாரம் நடத்துமென ஆளுங்கட்சியின் பிரதான அமைச்சர்கள் கடந்த நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்தனர்.

நெருக்கடியை சந்தித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்த வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் பொதுத் தேர்தலை நடத்தும் இக்கட்டான நிலைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு தள்ளப்படும்.

இதனால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகலாம். வரவு – செலவுத் திட்டத்தில் 10 பில்லியன் ரூபா நிதியே தேர்தலை நடத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியில் பொதுத் தேர்தலை நடத்தினால் நிதி பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் வட்டாரங்களில் அறிய முடிந்தது.

ரணிலின் திட்டம்

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் எண்ணமாக உள்ளதாகவும் அதற்கான ஆலோசனைகளையும் அரசாங்கம் நடத்திவருகிறது.

தற்போதைய சூழலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் எந்தவொருக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்பெறாதென்ற உளவுத் தகவல்கள் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலொன்று நடைபெற்றால் ஆளுங்கட்சி கடுமையான சரிவை சந்திக்கும் என சில கருத்துக் கணிப்புகளும் வெளியாகியுள்ளன.

பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிடின், கூட்டணி அரசாங்கம் ஒன்றை ஜனாதிபதியால் அமைக்க முடியும். அந்த நோக்கதுடனே அரசாங்கம் பொதுத் தேர்தல் குறித்து ஆலோசித்து வருவதாகவும் அறிய முடிகிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *