பகவத் கீதையில் சத்தியம் செய்து பதவியேற்ற அவுஸ்திரேலிய செனட்டர்

பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்று உலகில் வாழும் இந்துக்களுக்கு பெருமையை பெற்றுக்கொடுத்தார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஆங்கிலேயர் ஆட்சியில் காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்தமையானது பெரும் பாராட்டுக்கு உள்ளானது.

பகவத் கீதை மீது கை வைத்து சத்தியப்பிரமாணம் செய்த முதல் பிரித்தானிய பிரதமர் என்ற பெருமையையும் ரிஷி சுனக் பெற்றார்.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளி அவுஸ்திரேலியரான சட்த்தரணி வருண் கோஷ் பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

இதனை செய்த முதல் அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் என்ற வரலாறையும் படைத்துள்ளார்.

இந்திய நீதிமன்றங்களில் வழக்கு கூண்டிலில் ஏறும் நபரிடம் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மீது கை வைத்து சத்தியம் பெறப்படுகிறது.

அவுஸ்திரேலிய சமஷ்டி பாராளுமன்றத்தின் செனட் சபையில் மேற்கு அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வருண் கோஷ், சட்டமன்றம் மற்றும் சட்டமன்ற பேரவை என்பன செனட்டராக தெரிவு செய்துள்ளன.

வருண் கோஷ் பேர்த்தில் சட்டத்தரணியாக தொழில் புரிந்து வருகிறார். அவர் மேற்கு அவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கொமன்வெல்த் சட்டத்திலும் பட்டம் பெற்றுள்ளார். வொஷிங்டனில் உள்ள உலக வங்கியின் ஆலோசகராகவும், நியூயோர்க்கில் நிதி சட்டத்தரணியாகவும் பணியாற்றியுள்ளார்.

வருண் கோஷ் தனது 17வது வயதில் அவுஸ்திரேலிய தொழில்கட்சியில் இணைந்து பேர்தில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். உடல் நலக்குறைவால் ஓய்வு பெற்ற தொழில் கட்சி செனட்டர் பேட்ரிக் டொட்சனுக்கு பதிலாக வருண் கோஷ் செனட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *