கான்ஸ்டபிளை பாலியல் பலாத்காரம் செய்த OIC

 

பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வடமேல் மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய, கட்டுபொட பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக உள்ள பொலிஸ் பரிசோதகர் மீது பல சந்தர்ப்பங்களில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதிப் பிரச்சினைகள் சுமத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொலிஸ் பரிசோதகரை வடமத்திய மாகாணத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஏற்பாடு செய்திருந்த போதிலும், அரசியல் அழுத்தங்கள் காரணமாக குறித்த பொலிஸ் பரிசோதகர் இடமாற்றத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, கல்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனது பொலிஸ் நிலையத்தில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். சம்பவத்தை எதிர்கொண்ட புதிய பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் நிலையத்திற்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் தெரிவித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, கடந்த 29ஆம் திகதி, சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் வாக்குமூலம் பெறுவதற்காக கட்டுபொட பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு பொறுப்பான பொலிஸ் பரிசோதகர் கல்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த போதிலும், அதற்குள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகயீன விடுமுறைக்கு விண்ணப்பித்து காவல் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளமை தெரிய வந்துள்ளது.

சுகயீன விடுமுறையில் சென்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இருப்பிடத்தை இதுவரை விசாரணை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *