Instagram – Facebook Messenger பாதுகாப்பில் புதிய ஏற்பாடு!

 

இன்ஸ்டாகிராம் மற்றும் மெஸெஞ்சரில் பதின்ம வயதினரின் பாதுகாப்புக்கான கட்டுப்பாடுகளை மெட்டா நிறுவனம் மேலும் இறுக்கியுள்ளது.

எந்த வயதினர் என்றாலும் நிஜ உலகை விட சமூக ஊடகங்களில் உலவுவதில், பாதுகாப்பு சார்ந்த அபாயங்கள் அதிகம். போலியும், பாவனையும் பூசிய அனானிகள் அதிகம் வலம் வரும் இடம் என்பதால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற இடமாகவே சமூக ஊடகங்கள் விளங்கி வருகின்றன.

ஆனபோதும் சமூக ஊடக பயன்பாடு என்பது அன்றாடத்தில் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால், அனைவரும் கவனமாக அங்கே உலவ வேண்டியிருக்கிறது. குறிப்பாக பதின்ம வயதினரின் சமூக ஊடக பயன்பாடு குறித்த கவலைகள் உலகம் முழுக்கவே பெற்றோர் மற்றும் பெரியவர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.

இவர்களின் கோரிக்கைக்கு அவ்வப்போது சமூக ஊடக நிறுவனங்கள் செவிசாய்ப்பதும் உண்டு. அந்த வகையில் அண்மையில் மெட்டா நிறுவனம் தனது சமூக ஊடகங்கள் சார்ந்த பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் இறுக்கமாக கட்டமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, மெஸெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராமில், தாங்கள் பின்தொடராத அல்லது இயல்பாக இணைக்கப்படாத எவரிடமிருந்தும் டிஎம் எனப்படும் நேரடி தகவல்களை, டீன் ஏஜ் பயனர்கள் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏற்பாடு இந்தியா உட்பட பல நாடுகளில் 18 வயதுக்கு குறைவானர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாட்டினை வழங்குகிறது. இதன் மூலம் இனி 18 வயதுக்குக் குறைவான பயனர்கள், தங்களது ஃபேஸ்புக் நண்பர்கள் அல்லது அலைபேசியில் பதிவாகி உள்ள எண்களுடன் தொடர்புடைய நபர்களிடமிருந்து மட்டுமே தனிப்பட்ட செய்திகளைப் பெறுவார்கள். பெற்றோர் கண்காணிப்பிலான இந்த கட்டுப்பாடு கட்டமைப்பினை நீக்குவதற்கு பெற்றோர் அனுமதி அவசியம்.

மெட்டா தனது சமூக ஊடக பயன்பாடுகள் நெடுக இதே போன்று, பதின்ம வயதினருக்கு அவர்களின் வயதுக்கு ஏற்ற அனுபவங்களை மட்டுமே வழங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வயதில் பெரியவர்கள் தங்களைப் பின்தொடராத பதின்ம வயதினருக்கு தனிப்பட்ட செய்தி அனுப்புவதைக் கட்டுப்படுத்தும் மெட்டா அதிரடியின் அடுத்தகட்டமாக இந்த புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் தொடர்ச்சியாக பதின்ம வயதினர் தங்கள் வயதுக்கு பொருந்தாத படங்கள் மற்றும் வீடியோக்களை அணுக தடை விதிக்கும் ஏற்பாடுகளையும் அறிமுகப்படுத்த மெட்டா முடிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் இந்த ஏற்பாடு நடைமுறைக்கு வரும் எனவும் மெட்டா தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *