தமிழ்நாட்டில் பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு சீர்வரிசையுடன் வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில், ஞாயிற்றுகிழமை மஸ்ஜிதே இலாஹி- பள்ளிவாசல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழா மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்றது.

அந்த கிராமத்தின் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசைகளுடன் சென்று, கலந்து கொண்டு திறப்பு விழாவை கொண்டாடினர்.

கிராமம் முழுவதும் முக்கிய வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்களில் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் மூன்று மதத்தவரும் திறப்பு விழாவுக்கு அழைப்பது போல வடிவமைக்கப்பட்டிருந்தது. பேனரின் ஓரத்தில் மஸ்ஜிதே இலாஹி என்று சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த போதும், எந்த மத பெயரும் குறிப்பிடாமல், “இறையில்ல திறப்பு விழா” என்று விழாவுக்கு பெயர் சூட்டியிருந்தனர். இந்த பேனர்கள் ஊர் கவுன்சிலர், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் போன்றவர்கள் சார்பாக ஊரின் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தது.

பள்ளிவாசல் திறப்பு : சீர்வரிசையுடன் வந்த இந்துகள், கிறிஸ்தவர்கள்
பள்ளிவாசல் திறப்பு : சீர்வரிசையுடன் வந்த இந்துகள், கிறிஸ்தவர்கள்

திறப்புவிழாவுக்கு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் ஊர்வலமாக சென்றனர். இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்துச் சென்றனர். கிறிஸ்தவர்கள் பாதிரியார் ரமேஷ் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டுச் சென்றனர்.

சீர்வரிசை கொண்டு வந்த இருமதத்தினரையும் சாலைக்கிராமம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நைனா முகம்மது தலைமையில், ஜமாத் உறுப்பினர்கள் மற்றும் அல்பத்ரு வாலிபர் முன்னேற்ற சங்க நண்பர்கள் ஆரத்தழுவி வரவேற்று பள்ளிவாசலுக்குள் அழைத்துச் சென்றனர்.

குளிர்பானங்கள், தண்ணீர் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர். பின்னர் 150 கிடா வெட்டி 7,000 பேருக்கு அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழா, அப்பகுதி மக்களிடையே மனநெகிழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளிவாசல் திறப்பு : சீர்வரிசையுடன் வந்த இந்துகள், கிறிஸ்தவர்கள்
  • பள்ளிவாசலுக்கு உள்ளே அழைக்கப்பட்ட இந்துக்கள், கிறிஸ்தவர்கள்

பள்ளிவாசல் கட்டுமான பணிகள் தொடங்கும் போதே திறப்பு விழாவிற்கு அனைத்து சமுதாய மக்களையும் அழைக்க வேண்டும் என முடிவு செய்திருந்தோம் என்கிறார் சாலைகிராமத்தை சேர்ந்த நைனா முகமத்.

இது குறுத்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்த பள்ளிவாசல் கட்ட துவங்கும்போதே இதன் திறப்பு விழாவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என எங்கள் ஜமாத் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

பல தலைமுறைகளாக இக்கிராமத்தில் மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்தவிதமான பாகுபாடும் இல்லை. நாங்கள் பல ஆண்டுகளாக முக்கிய நிகழ்வுகளுக்கு பள்ளிவாசலுக்குள் மாற்று சமுதாயத்தினரை அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்குள் எந்த பேதமும் கிடையாது. அதேபோல் கிறிஸ்தவ மற்றும் இந்துக்களின் பண்டிகைகள் மற்றும் முக்கிய திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்வோம். பள்ளிவாசலில் இருந்து கிராமத்தில் உள்ள இந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாயத்திற்கு உரிய மரியாதையை செய்து வருகிறோம்.

பள்ளிவாசல் சார்பாக திறப்பு விழாவின் அழைப்பை கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என பாகுபாடு இன்றி வழங்கினோம். அழைப்பிதழ் வழங்காவிட்டாலும் திறப்பு விழாவிற்கு அனைவரும் வந்திருப்பார்கள்.” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

  • பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மகேஸ்வரி, எங்கள் கிராமத்தில் பண்டிகையின் போது மட்டுமல்லாமல், தினசரி நடவடிக்கையிலும் ஒன்றாக இணைந்து தான் அனைத்து மதத்தவரும் வாழ்ந்து வருகிறோம் என்கிறார்.

“எங்கள் ஊரில் பிரதான தொழில் விவசாயம். விவசாய பணிகளுக்கு அனைத்து சமுதாயத்தினரும் வேலைக்கு வருவார்கள். அதே போல் 100 நாள் வேலைக்கும் நாங்கள் செல்லும்போது எங்களுடன் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என பலரும் வேலை செய்வார்கள்.

நாங்கள் அவர்களுக்கு உணவு கொடுப்பதும் அவர்களிடம் இருந்து உணவு வாங்கி சாப்பிடுவது என எந்த பேதமுமின்றி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறோம்.

பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு செல்லும் முன் மக்கள் அனைவரும் கோவிலில் ஒன்று கூடி சாமி கும்பிட்டு சீர்வரிசை பொருட்களை வைத்து பூஜை செய்து எடுத்துச் சென்றோம்.

எங்கள் ஊர் திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்துகளாகிய நாங்களும் இஸ்லாமிய, கிறிஸ்தவ விழாக்களில் கலந்து கொள்வோம். இது இன்று நேற்று அல்ல தலைமுறை தலைமுறையாகவே நடந்து வரும் ஒரு வழக்கம்” என்கிறார் மகேஸ்வரி.

பள்ளிவாசல் திறப்பு : சீர்வரிசையுடன் வந்த இந்துகள், கிறிஸ்தவர்கள்
பள்ளிவாசல் திறப்பு : சீர்வரிசையுடன் வந்த இந்துகள், கிறிஸ்தவர்கள்
  • பள்ளிவாசல் திறப்பில் கிறிஸ்தவர்கள் சார்பாக கலந்து கொண்ட ஸ்டீபன் பிபிசி தமிழிடம் பேசினார். மற்றவர்களுக்கு தான் இது புதிதான நிகழ்வு என்றும், தங்கள் ஊரில் காலங்காலமாக நடைபெறும் ஒன்று என்று அவர் தெரிவித்தார்.

“இன்று எங்கள் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்து பாதிரியார் தலைமையில் இந்து மக்களுடன் இணைந்து பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொண்டோம்.

எங்கள் கிராமத்தின் சிறப்பே பொங்கல் விழா தான். ஆண்டுதோறும் சமத்துவ பொங்கல் கொண்டாடி வருகிறோம். பொங்கல் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தவரின் பண்டிகைகளையும் நாங்கள் ஒன்று கூடி கொண்டாடுவோம். திறப்பு விழாவில் பங்கேற்றது மிகுந்த மன மகிழ்ச்சியை தந்தது” என்றார் ஸ்டீபன் .

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *