சீனாவின் விமானப் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்கிறது

சீனாவுக்கு வந்து செல்லும் அனைத்துலக விமானங்களின் எண்ணிக்கை இவ்வாண்டிறுதிக்குள் கொவிட்-19 தொற்று பரவலுக்கு முந்திய காலத்தில் பதிவானதில் 80 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவின் சீன சிவில் விமான நிர்வாக அமைப்பு நேற்று வியாழக்கிழமை இந்த விடயத்தை தெரிவித்தது. 2024ஆம் ஆண்டிறுதிக்குள் வாரத்துக்கு 6,000 அனைத்துலக விமானங்கள் சீனா வந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்நாட்டுக்கு 4,600 அனைத்துலக விமானங்கள் வந்து செல்கின்றன. 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 500ஆக இருந்தது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்போது 63 விமானங்கள் நேரடியாகப் பயணம் மேற்கொள்கின்றன. இவ்வாண்டு அந்த எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிஎஎசி தெரிவித்தது.

சீனாவில் இவ்வாண்டு 690 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிஎஎசி கூறியுள்ளது. உள்ளூரில் மேற்கொள்ளப்படும் பயணங்கள், அனைத்துலகப் பயணங்கள் ஆகிய இருவகை பயணங்களும் அந்த எண்ணிக்கையில் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *