நிறத்தில் என்ன இருக்கிறது?

 

ஒருமுறை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சிஐஐ சார்பில் நடைபெற்ற தென்னிந்திய ஊடகப் பொழுதுபோக்கு கருத்தரங்கில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசும்போது, “என்னிடம் ஒரு சீனர், நீங்கள் இந்தியரா..? வட இந்தியப் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். வட இந்தியர்களையும் பிடிக்கும். அவர்கள் சிகப்பாக அழகாக இருப்பார்கள்” என்றார்.

அவர் தென்னிந்திய படங்களைப் பார்த்திருக்கிறாரா என்று தெரியவில்லை. மக்கள் வண்ணங்களால் தங்களின் அடையாளத்தை, கவுரவத்தை நிலைநாட்ட விரும்புகிறார்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. நாமும் வண்ணத்தை விரும்புகிறோம். அதை சிறந்த முறையில் வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

அதாவது தென்னிந்தியர்களின் பொதுமை நிறமான கருமை நிறத்தைக் கொண்டாட வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசினார்.

அவர், தனது வலைதளப் பக்கத்தில் பதிந்த, தமிழ்த்தாயின் உருவம் கருப்பாக இருப்பதாக சிலர் சமூக ஊடகங்களில் விமர்சித்ததற்கு பதிலாகவும் இப்படிச் சொல்லி இருக்கலாம்.

தவிர, பொதுவாகவே அவரது கருத்து கவனிக்கத் தக்கது. சிவப்பு நிறத்தில் இருக்கும் வெள்ளையர், ஆட்சி செய்ய ஆரம்பித்த பிறகுதான் சிவப்புத் தோலின் மீது நம் மக்களுக்கு ஈர்ப்பு வந்தது. சிவப்புதான் அழகு என நினைக்க ஆரம்பித்தனர்.

அதன் நீட்சியாக திரைப்படங்களில், சிகப்பு ஹீரோயின்கள் தோன்ற ஆரம்பித்தார்கள். ‘கருப்பாக இருந்தால் ஹீரோயின் வாய்ப்பு இல்லை’ என எழுதி வைக்காத குறையாக ஒரு விதி கடைபிடிக்கப்பட்டது.

அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் நகைச்சுவை அல்லது குணச்சித்திர பாத்திரங்களுக்கே பயன்படுத்தப்பட்டார்கள்.

ஆனாலும் காலம்தோறும், பொது புத்திகளை வென்றவர்கள் இருக்கத்தானே செய்தார்கள்?

அப்படி திரையில் நாயகியாய்த் தோன்றி மக்கள் மனதைக் கவர்ந்தவர்கள் என சரோஜாதேவி உள்ளிட்ட சிலரைச் சொல்லலாம்.

அடுத்தடுத்து, சரிதா, அர்ச்சனா, ஈஸ்வரி ராவ் என கருப்பழகிகளின் (நாயகிகளின்) பட்டியல் உண்டு.

ஆனாலும் ஒட்டுமொத்த ஹீரோயின்கள் சதவிகிதத்தில் இவர்களின் எண்ணிக்கை சொற்பமே.

இந்தக் கருப்பு விசயத்தில் நாயகர்களும் தப்ப வில்லை. கறுப்பு, வெள்ளை காலத்திலேயே வெளுப்பு ஹீரோதான் தேவை என்று நினைத்தது திரையுலகம்.

கருப்பும் அழகுதான் என திரையில் நிரூபித்த நாயகர்கள் ரஜினியும் விஜயகாந்த்தும். ஆனால் ஒரு படத்தில், கருப்பு நிறம் என்பதாலேயே இரு பெண்களை கிண்டல் செய்யும் காட்சியில் நடித்து இருந்தார் ரஜினி.

அதே நேரத்தில் – ஆச்சரியகரமாக – சிவப்பு நிறத்தை விரும்பாதவர்களும் உண்டு. அதுவும் திரையுலகில். அவர், பிரபல ஹீரோயின் டாப்ஸி.

‘வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்களா, உன்ன வெயிலுக்கும் காட்டம வளர்த்தாங்களா…’ என்ற பாடல் இவருக்காகவே ‘ஆடுகளம்’ படத்தில் எழுதப்பட்டது.

சிவப்பு என்பதைவிட, பளபள வெள்ளை நிறம் கொண்ட நாயகி. இவர், ”சிவப்பாக இருப்பதை நினைத்து நான் பெருமைப்பட்டதில்லை. சிவப்பு என்பதை விட கருப்பு அல்லது மாநிறமாக இருக்கும் பெண்கள், ஆண்களே அழகு” என்றார்.

இவர் பேசிய இன்னொரு விசயம் முக்கியமானது. அதை கடைசியில் பார்ப்போம்.

தங்களது கருப்பு நிறத்தை – குறிப்பாக முகத்தை – சிகப்பாக மாற்ற ஏகப்பட்ட க்ரீம்களை பயன்படுத்துகிறார்கள் பல பெண்கள்.

ஆனால் மருத்துவர்களோ, “குண்டாக இருப்பவர்களை ஒல்லியாக மாற்ற முடியும். ஒல்லியாக இருப்பவர்களை குண்டாக மாற்ற முடியும். ஆனால் கருப்பாக இருப்பவர்களை வெள்ளையாக மாற்ற முடியாது” என்கிறார்கள்.

ஆம்.. அதுதான் அறிவியல் உண்மை.

தவிர, கருப்பு நிறம் என்றால் தாழ்வானது என்கிற தவறான எண்ணத்தைப் போக்க வேண்டும்.

‘பல்வேறு நிறங்களில் கருப்பும் ஒரு நிறமே. அதை வெளுப்பாக்குவதாக நினைத்து இயல்பான இயற்கை அழகைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது.

இன்னொரு விசயம்.

“ஆரோக்கியமான நிறம் கருப்பு” என்கின்றன பல விஞ்ஞான ஆய்வுகள்.

ஆம்.

நம் தோலின் நிறத்தை நிர்ணயிப்பது தோலில் இருக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிகளே. இவை அதிகமாக சுரந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் வெளுப்பாகவும், தோலின் நிறம் அமையும்.

தோலின் கீழ் அடுக்கில் இருக்கும், ‘மெலனோஸைட்’ என்னும் வகையைச் சார்ந்த செல்கள் தான் மெலனினை உற்பத்தி செய்கின்றன.

இவை தான் சூரியனிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்கள், பெரிய அளவில் தோலுக்குள் ஊடுருவாமல் தடுக்கின்றன. அப்படி இருந்தால்தான் உடல் பாதிக்கப்படாது. ஆக கருப்பு ஒரு பாதுகாப்பு என்பதை உணர வேண்டும்.

தவிர வெள்ளைத்தோல் கொண்டவர்களுக்கு – அதாவது, மெலனின் உற்பத்தி குறைவானவர்களுக்கு – தோல் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

‘சிவப்பு பெண்கள் தான் அழகு, கருப்பு அழகல்ல’ என்ற கருத்தை பரப்பும் எந்த செய்தியையும், விளம்பரப் படத்தையும், மேற்கோளையும் எதிர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு, வாவ், (women of worth) டார்க் ஈஸ் பியூட்டிபுல் (dark is Beautiful) போன்ற அமைப்புகளே உருவாகிவிட்டன.

இப்போது, ‘வெள்ளாவி வெளுப்பு’ நடிகை டாப்ஸிக்கு வருவோம்.

அவர் ஒருமுறை சொன்னது:

“கருப்பு பெண்களை குறிவைத்து, வெள்ளையாக எங்கள் க்ரீமை பயன்படுத்துங்கள் என விளம்பரப்படுத்தும் ஒரு க்ரீம் நிறுவனம் என்னை அணுகியது.

தங்களது விளம்பர மாடலாக என்னை பொறுப்பேற்கச் சொன்னது. பெரும் பணம் தருவதாகவும் கூறியது. ஆனால் அதை நான் ஏற்கவில்லை.

நிறத்தில் என்ன இருக்கிறது… தன்னம்பிக்கையும் உழைப்புமே தங்கள் முன்னேற்றத்துக்கு வழிவக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும்!” என்றார்.

சரியாகத்தானே சொல்லியிருக்கிறார் டாப்ஸி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *