காசாவில் 50,000 கர்ப்பிணித் தாய்மார்கள்: சுகாதார தேவை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

காசாவில் தற்போது சுமார் 50,000 கர்ப்பிணித் தாய்மார்கள் வாழ்ந்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளது.

சுகாதார கட்டமைப்பு சிதைவடைந்துள்ள நிலையில் நாளொன்றுக்கு 180 இற்கும் அதிகமான பிறப்புகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், காசாவின் சுகாதார கட்டமைப்பின் அழிவை கண்டிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom தெரிவித்துள்ளார்.

அத்துடன், போர் சூழலில் தொடர்ந்து பணியாற்றிவரும் சுகாதார நிபுணர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சுகாதார தேவை அதிகரித்துள்ளதாகவும் 30 வீதமான சுகாதார ஊழியர்கள் மாத்திரமே தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக காசா பகுதியிலுள்ள பல வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கடந்த 20 ஆம் திகதி வரை காசாவில் உள்ள வைத்தியசாலைகள், ஆம்புலன்ஸ்கள் உட்பட சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் மீது 246 தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முற்றுகையிடப்பட்ட பிரதேசங்களிலுள்ள 36 வைத்தியசாலைகளில் 9 வைத்தியசாலைகள் மாத்திரம் ஓரளவு செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் தொடர்ந்தும் காசாவிலுள்ள வைத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *