அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்… ஐரோப்பா நாட்டில் 300 இந்திய பயணிகளுடன் தரையிறக்கப்பட்ட விமானம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 303 இந்திய பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று பிரான்சில் உள்ள விமான நிலையம் ஒன்றில் அதிரடியாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலை அடுத்தே சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்புடைய விமானமானது வடகிழக்கு பிரான்சில் தரையிறக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், அந்த விமானத்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் சிலர் பயணப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்... ஐரோப்பா நாட்டில் 300 இந்திய பயணிகளுடன் தரையிறக்கப்பட்ட விமானம் | Plane Grounded Over Human Trafficking Fears

ஏர்பஸ் ஏ340 ரக விமானம் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிகரகுவா தலைநகர் மனகுவாவுக்கு பறந்து கொண்டிருந்தது. இந்த நிலையிலேயே தொழில்நுட்ப காரணங்களை குறிப்பிட்டு பிரான்சின் மார்னே பகுதிக்கு சொந்தமான குட்டி விமான நிலையம் ஒன்றில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிசார் அந்த விமான நிலையத்தை மூடிவிட்டு, பயணிகளை விசாரிக்கும் பொருட்டு தடுத்து வைத்துள்ளனர். 303 இந்திய பயணிகளில் சிலர் சட்டவிரோத குடியேறிகள் என அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இரு பயணிகள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, முதலில் பயணிகள் அனைவரையும் விமானத்தில் இருக்கவே அதிகாரிகள் அனுமதித்தனர், ஆனால் பின்னர் விமான நிலையத்தின் வருகை ஓய்வறை படுக்கைகளுடன் காத்திருக்கும் இடமாக மாற்றப்பட்டது என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த விமானமானது ரோமானிய தனியார் நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமானது. அந்த நிறுவனம் சார்பில் சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கையில்,

இந்த விவகாரம் தொடர்பில் பிரெஞ்சு அதிகாரிகளுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்றும் அடுத்த இரண்டு நாட்களில் விமானம் புறப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரான்சில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்புகொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமையை ஆராய்ந்து வருகிறோம் என்றும், பயணிகளின் நலனை உறுதிப்படுத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *