கற்பிட்டி அல் அக்ஸாவின் வித்தகன் ஹுசைன்தீன் 34 வருட ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு…!


( கற்பிட்டி – எம்.எச்.எம் சியாஜ்)

கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவனும் ஆசிரியரும் பிரதி அதிபரும் உதவி அதிபரும் மற்றும் பதில் அதிபராகவும் கடந்த 34 வருட காலமாக அயராது பாடசாலையின் வளர்ச்சிக்காகவும் மாணவர்களின் முன்னேற்றத்திற்காகவும் இன்று வரை சேவை செய்த கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் வித்தகன் எஸ்.எச் ஹுசைன்தீன் (பாசர்) ஆசிரியர் இன்று (2023/11/27) தனது ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

கற்பிட்டி அல் அக்ஸா வில் தனது க.பொ.த உயர்தர பரீட்சையை எழுதிய பின்னர் அல் அக்ஸாவின் தேவை கருதி தொண்டர் ஆசிரியராக சேவையாற்றிய பின்னர் கற்பிட்டி பிரதேச சபையில் சிறிது காலம் கடமைபுரிந்தார். 1989 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆசிரியர் நியமனம் பெற்று தனது முதல் ஆசிரியர் சேவையை கற்பிட்டி நுரைச்சோலை முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆரம்பித்தார்.
1990 ம் ஆண்டு அகஸ்ட் மாதம் 02 ம் திகதி முதல் தான் கல்வி கற்ற கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு இடம்மாற்றம் பெற்று வந்து சமூகக் கல்வியும் வரலாறும் பாட ஆசிரியராகவும் உயர்தர பிரிவிற்கான அரசறிவியல் பாட ஆசிரியராகவும் சேவையாற்றியதுடன் பாடசாலை நிர்வாகம் சார்ந்த விடயங்களிலும் அதிபருடன் இணைந்து செயல்பட்ட ஒரு ஆசான்.

மேலும் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் மாணவர் விடுதி புணரமைப்பு மற்றும் பாடசாலையின் பள்ளிவாசலை கட்டி முடித்தல் என்பவற்றிற்கு அன்றைய அதிபர் எம்.எச்.மஹ்றூப் மரைக்கார் உடன் பக்க பலமாக இருந்து மேற்படி அபிவிருத்தி விடயங்களை வெற்றிகரமாக செய்து முடித்த எஸ்.எச் ஹூசைன்தீன் (பாசர்) ஆசிரியர்.
பாடசாலையில் நடைபெறும் சகல விதமான கலை நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடாத்தி முடிப்பதுடன் மாணவர்களின் இணை பாடவித செயற்பாடுகளுக்கு மாணவர்களுக்கு பக்கபலமாக நின்று செயற்படுபவர்.

மேலும் 1990 ம் ஆண்டு காலப் பகுதிகளில் பாடசாலை பரீட்சை விடயங்களை தலைமை ஏற்று கற்பிட்டி கோட்ட மட்டத்தில் உள்ள சகல தமிழ் மொழி பாடசாலைகளுக்கும் வினாப்பத்திரங்களை விநியோகம் செய்து சகல பாடசாலைகளினதும் பாராட்டையும் பெற்றவர்.
அத்தோடு கற்பிட்டியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையான அல் ஹீரா பாடசாலை உத்தியோகபூர்மாக ஆக்கப்பட்டு புதிய அதிபர் வரும் வரை அல் அக்ஸா தேசிய பாடசாலையின் ஊடாக இணைப்பு செய்யப்பட்டு அப்பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்று செயற்பட்டவர்.

2014 ம் ஆண்டு மே மாதம் 28 ம் திகதி தொடக்கம் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பிரதி அதிபராக கடமை பொறுப்பேற்று சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் சேவையாற்றியவர். அத்தோடு அல் அக்ஸா தேசிய பாடசாலையில் அதிபர் இல்லாத சிறிது காலம் பதில் அதிபராகவும் திரு ஹுசைன்தீன் (பாசர் ) சேவையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவரின் ஆசிரியர் சேவை ஓய்வானது அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நிருவாகத்திற்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஊர் மக்களுக்கும் கல்வி புலத்தில் பெறும் இழப்பாகவே எண்ணுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *